காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் புனிதநீருடன் சிவாச்சாரியார்கள் ஊர்வலம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, புனிதநீர் நிரப்பிய குடங்களை, சிவாச்சாரியார்கள், கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் டிச., 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, 29 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி, ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த மாதம் 3ம் தேதி பந்தகால் முகூர்த்தம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி பல்வேறு நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்டு குடங்களில் நிரப்பப்பட்ட புனிதநீர் குடங்களுக்கு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, சிவ வாத்தியங்கள், மங்கல வாத்தியங்கள் இசைக்க, புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக ஏகாம்பரநாதர் கோவிலுக்கு எடுத்து வந்தனர். புனிதநீர் குடங்கள் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள யாகசாலை மண்டபத்தில் வைக்கப்பட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கோபூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது. ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் குமாரதுரை, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வாளர் அலமேலு, கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெகன்னாதன், வரதன், வல்லக்கோட்டை முருகன் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்து வரும் திருப்பணி, கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடு, பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தி.மு.க., – எம்.எல்.ஏ., க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன் ஆகியோர் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.