உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வித்தியாச வழிபாட்டு முறை; ஹனுமனை கிராம தெய்வமாக வணங்கும் மக்கள்

வித்தியாச வழிபாட்டு முறை; ஹனுமனை கிராம தெய்வமாக வணங்கும் மக்கள்

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பியில் துளு மொழி பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். இரட்டை மாவட்ட மக்கள், தங்கள் பகுதியை துளு நாடு என்றே கூறுகின்றனர். கர்நாடகாவின் மற்ற மாவட்டங்களை காட்டிலும், கடலோர மாவட்டங்களில் தெய்வ வழிபாட்டு முறை சற்று வித்தியாசமாகவே இருக்கும். இங்கு நடக்கும் பூதகோல நடனம் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.


தட்சிண கன்னடாவின் புத்துார் தாலுகா, இலிந்ததே கிராமத்தின் ஹனுமனை தங்கள் கிராம தெய்வமாக வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக உள்ளது. ஆண்டிற்கு ஒரு முறை, ‘ஹனுமன் கோல’ என்ற பெயரில் திருவிழா நடத்துகின்றனர். திருவிழாவின் போது வீட்டிற்கு ஒருவர் ஹனுமன் வேடம் அணிந்து விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். திருவிழாவுக்கு முந்தைய நாள் வரை யாரிடமும் பேச முடியாது. திருவிழாவின் போது மேள தாளங்கள் எதுவும் இல்லை. திருவிழா நடக்கும் இடமே மிகவும் அமைதியாக இருக்கும். ஹனுமன் வேடமிட்டு வருவோர் துள்ளி குதித்து வருகின்றனர். அப்போதும் கூட யாருமே பேச கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஹனுமன் வேடம் அணிவோர் தென்னை மரத்தில் ஏறி இளநீரை பறித்து மக்களுக்கு கொடுக்கும் நடைமுறையும் உள்ளது. வாழை, பாக்குகளும் படைக்கப்படுகின்றன. விவசாயத்திற்கு குரங்குகள் அச்சுறுத்தல் இருக்க கூடாது என்பதற்காக, பாரம்பரிய திருவிழாவை நடத்துவதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். ஹனுமன் வேடம் அணிவோர் முகத்தில் கருப்பு மை பூசுவதுடன், கருப்பு உடை, வெள்ளை நிற பேன்ட், காலில் சலங்கை அணிந்து கொண்டு நடனமாடுவது துளு மக்களின் கலாசாரத்தை எடுத்து காட்டுகிறது.


எப்படி செல்வது?: பெங்களூரில் இருந்து புத்துார் 314 கி.மீ.,யில் உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து அரசு பஸ்கள் உள்ளன. ரயிலில் சென்றால் பண்ட்வால், மங் களூரில் இறங்கி செல்ல வேண்டும். – நமது நிருபர் –


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !