திருப்புத்தூரில் சிதம்பர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பெரியகடைவீதி பெரியபள்ளிவாசல் அருகிலுள்ள சிதம்பர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணி நடந்தது. கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, தனபூதை, கோபூஜையுடன் கண்பதி பூஜையும் ஹோமம் நடைபெற்று வாஸ்துசாந்தி நடந்தது. மாலையில் ஆதித்திருத்தளிநாதர் ஆலயத்திலிருந்து பூமிபூஜை செய்து மண் எடுத்து சிவாச்சாரியர்கள் ஊர்வலமாக வந்து யாகசாலை வந்தனர். பின்னர் முதலாம் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம்கால யாகசாலை பூஜைகள் துவங்கின. பூர்ணாகுதிக்கு பின்னர் யாகசாலையிலிருந்து பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் கலசங்கள் புறப்பாடானது. தொடர்ந்து விமான,கோபுர கலசங்களுக்கு காலை 10:10 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலுக்கு அருகில் பள்ளிவாசல் உள்ளதால் இஸ்லாமியர்கள் கும்பாபிஷகத்திற்கு வந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினர். ஏற்பாட்டினை ஹிந்து சமய அறநிலைத்துறை இன்ஸ்பெகடர் பிச்சுமணி, தக்கார் ச.விநாயகவேல், பரம்பரை பூசகர் கணேசன், உபயதாரர் சேது சிவராமன் ஆகியோர் செய்தனர்.