ஜென்மாஷ்டமி விழா; திருப்பாச்சேத்தியில் கஷ்ட நிவாரண பைரவருக்கு சிறப்பு பூஜை
திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தி மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகிய நாதர் கோயிலில் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
தமிழகத்தில் இரட்டை கால பைரவர் கொண்ட கோயில்கள் திருப்பாச்சேத்தி மற்றும் மதுரை புட்டுத்தோப்பு உள்ளிட்ட இடங்களில் மட்டுமே உள்ளன. கஷ்ட நிவாரண பைரவர் என அழைக்கப்படும் இங்கு தேய்பிறை, வளர்பிறை நாட்களில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும், வேண்டுதல்கள் நிறைவேற கால பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது வழக்கம், இன்ற ஜென்மாஷ்டமி என்பதால் கஷ்ட நிவாரண பைரவருக்கு காலை பத்து மணி முதல் இளநீர், பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தங்க நிற அங்கி சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு வடை பாயாசத்துடன் அன்னதானம் நடந்தது. சிறப்பு பூஜையில் திருப்பாச்சேத்தி மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் பங்கேற்று கால பைரவரை தரிசனம் செய்தனர்.