உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  வரலாறு சொல்லும் நடுகற்கள் புதையும் பரிதாபம் : பாதுகாக்க நடவடிக்கை தேவை

 வரலாறு சொல்லும் நடுகற்கள் புதையும் பரிதாபம் : பாதுகாக்க நடவடிக்கை தேவை

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் போர் உட்பட மக்களை காப்பாற்றும் நிகழ்வில் உயிர்நீத்தோர் நினைவாக வைத்துள்ள நடுகற்கள் தற்போது பராமரிப்பின்றி புதைந்து வருகின்றன.


உசிலம்பட்டி பகுதி கிராமங்களில் ஏராளமான நடுகற்கள் உள்ளன. புலியை கொன்றவர்கள், போர்களில் உயிர்நீத்தோர், மக்களுக்காக உயிர்நீத்தவர்கள் நினைவாக, அக்காலத்தில் இவை அமைக்கப்பட்டன. இந்த கற்கள் அக்கால மனிதர்கள், ஆயுதங்கள், ஆபரணங்களை அடுத்த தலைமுறையினர் அறியும் வகையில் உள்ளன. வளரி ஆயுதத்துடன் கூடிய நடுகற்கள் பல கிராமங்களில் உள்ளன. இந்த நடுகல்லை பட்டவன்சாமி என அப்பகுதி மக்களை காப்பாற்றியவர் என்னும் பொருள்பட கூறுகின்றனர். நடுகல் வீரருக்கு குறிப்பிட்ட நாளில் வந்து வழிபாடு செய்யும் வழக்கமும் இருந்துள்ளது. காலப்போக்கில் இந்த வழிபாடும் குறைந்ததால் கவனிப்பாரற்று மண்ணில் புதைந்து வருகின்றன. காந்திராஜன், தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது: சமீபத்தில் செல்லம்பட்டி - திடியன் ரோட்டில் வலங்காகுளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் கையில் வாள், இடையில் வலதுபக்கம் குறுவாள், இடதுபக்கம் வளரி ஆயுதம், தலையின் இடப்பக்கம் கொண்டையுடன் தோற்றமளிக்கும் ஆண், அருகில் பெண்ணின் வலதுபக்க தலையில் கொண்டை, வலது கையில் தண்ணீர் குடுவையை வைத்தபடி நின்றிருக்கும் பெண்ணின் புடைப்புச் சிற்பமும் உள்ளது. பட்டவன்சாமி என முன்னோர்கள் கூறியதாக கூறுகின்றனர். தற்போது வழிபாடின்றி நடுகல்லின் ஒருபகுதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது.


இதற்கு அருகில் உள்ள கிணற்றின் தெற்குபகுதி சுவரில் தலைவன், தலைவிநின்றிருப்பது போன்ற புடைப்புச்சிற்பமும், கீழே எழுத்துக்களும் உள்ளன. ஊருக்கு அருகில் மக்கள் ஒரு காலத்தில் குடிநீர் தேவைக்கு பயன்படுத்திய கிணறு அருகில் பாதி உடைந்த நிலையில் மண்ணில் புதைந்து நிலையில் இரண்டு பெண்கள், அருகில் சிறுவன் உள்ளது போன்ற புடைப்புச்சிற்பத்துடன் நடுகல் உள்ளது. இரண்டு பெண்களும் தலையின் மேல் கொண்டையுடன், வலதுகையில் மலர்செண்டு வைத்துள்ளது போல் காட்சியளிக்கின்றனர் என்றார். 


பாதுகாக்க வேண்டும்: உசிலம்பட்டி: பகுதி கிராமங்களில் நெடுங்கல் வழிபாட்டில் இருந்து புடைப்புச்சிற்பங்களுடன் நடுகற்கள் வைத்து வழிபாடு காலம்காலமாக நடக்கிறது. போரில் ஈடுபட்டு உயிரிழந்த வீரர்கள், புலிகுத்தி, ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்கள், வளரி ஆயுதம், விவசாய பணியில் ஈடுபட்டோர் என நடுகற்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில நடுகற்கள் தொடர்ந்து வழிபாட்டில் இருந்து வருவதால் புதைந்து போகாமல் பராமரிக்கப்படுகிறது. பல நடுகற்கள் வழிபாட்டில் விடுபட்டுப் போனதால் மண்ணில் புதைந்து வருகின்றன. ஊராட்சி, வருவாய்த்துறை நிர்வாகங்கள் இக் கற்களின் பின்னணிச் செய்திகளை ஆவணப்படுத்தி, புதைந்து விடாமல் பராமரிக்கவும் முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !