உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணனின் பதற்றம்; காதலின் தவிப்பு லேகா பிரசாத்தின் நடனத்தில் கச்சிதம்

கிருஷ்ணனின் பதற்றம்; காதலின் தவிப்பு லேகா பிரசாத்தின் நடனத்தில் கச்சிதம்

வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயு பகவானுக்கு, நவசந்தி கவுத்துவம் வாயிலாக நடனத்தை சமர்ப்பித்தார் வளரும் கலைஞரான லேகா பிரசாத். இதை பிரதானமாக யாரும் செய்வதில்லை. ஆனால், இவர் செய்தது புதிதாக இருந்தது. பின், முக்கிய உருப்படியான ராஜகோபால்சுவாமியை நாயகனாக கொண்டு ஆனந்த பைரவி ராகம், ‘சகியே’ வர்ணத்தில் இறங்கினார். அடுத்தடுத்து, நாயகனின் பெருமை, நாயகனை காதலிப்பது, தன் குழந்தைத் தனத்தை நாயகி வெளிப்படுத்துவதை காட்சிப்படுத்தினார். நாயகன் கிருஷ்ணனுக்கும், கோபியருக்கும் ஒரு போட்டி. குளித்துவிட்டு குளத்தில் இருந்து வெளியேறி யார் முதலில் தயாராவது? இதில், வெற்றி பெற வேண்டும் என, அவசர அவசரமாக வரும் கிருஷ்ணன், தன் ஒரு காதில் அவரது குண்டலத்தை மாட்டுகிறார். மற்றொரு காதில் தவறுதலாக கோபியரின் தோடு அணிகிறார். கிருஷ்ணனின் இந்த பதற்றத்தை, நாட்டியத்தில் லேகா காட்டியவிதம் ரசிக்க வைத்தது.


பின், நாயகன் மேல் தான் வைத்திருக்கும் காதலால், அவரை காண முடியாமல் தத்தளி க்கிறார். மனதில் ஏற்படும் நடுக்கத்தை தோழியிடம் சொல்லி புலம்புகிறாள். தன் தவிப்பை, நாயகனிடம் எப்படியாவது சொல்வாள் என நினைத்து இவ்வாறு செய்கிறாள். இதையடுத்து நாயகன் வருகைக்காக, பசலை படிந்த கண்களுடன் நாயகி காத் திருக்கிறாள். இந்த காதலின் தவிப்பை, பத வர்ணத்தில், அபிநயங்களால் லேகா மெருகேற்றினார். பின், அப்பாவி நாயகியாக கமாஸ் ராக ஜாவளியால் உருவமெடுத்தார். தோழியுடன் திருவிழாவிற்கு செல்லும் நாயகி, ராட்டினத்தில் சுற்றுகிறாள். அப்போது, விழுந்துவிடுவோமோ என நாயகிக்கு பீதி தொற்றிக்கொள்கிறது. இந்த காட்சியை பார்வையாளர்களுக்கு கடத் தியது, லேகாவின் நடனத்தில் துல்லியமாக அமைந்தது. மேற்கண்ட காட்சியமைப்புகளை, மேடை முழுதும் சுற்றி சுழன்றி அற்புத கோர்வைகளோடு செய்து காண்பித்தார். மிஸ்ரசாபு தாள பெஹாக் தில்லானாவுடன் பிரகதீஸ்வரரை வணங்க, கச்சேரி நிறைவடைந்தது. நாரத கான சபாவில் நடந்த லேகா நடன நிகழ்ச்சிக்கு, நட்டுவாங்கம் மற்றும் ஆடல் அமைப்பை பிரியா முரளி ஏற்றிருந்தார். நந்தினி ஆனந்த், நாகை ஸ்ரீராம், கலையரசன் ஆகியோரின் பக்கவாத்திய இசை, ரசிகர்களின் மனதை கவர்ந்தது. – மா.அன்புக்கரசி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !