நினைத்தை நடத்தும் லட்சுமி நரசிம்மர் கோவில்
ஹூப்பள்ளி மாவட்டம், வெங்கடேஷ்வர் நகர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவில் பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இந்த கோவில் அமைந்துள்ள பகுதியை சுற்றி, மரங்கள் சூழ்ந்து பசுமையாக காணப்படுகிறது. கோவிலின் கட்டட அமைப்பு, பக்தர்களை கவரும் வகையில் உள்ளது. கோவில் நன்கு பராமரிக்கப்படுவது மற்றொரு சிறப்பு. வாகனங்களை நிறுத்த இலவச பார்க்கிங் வசதியும் உள்ளது. இந்த கோவிலுக்கு வருவோர், 24 நிமிடங்கள் அமர்ந்து மனதார நரசிம்மரை வேண்டினால், நினைத்த காரியம் நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இங்கு அமைதியான சூழல் நிலவுவதால் தியானம் செய்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது. இங்கு நரசிம்ம ஜெயந்தி பிரமாண்டமாக நடக்கும். அந்த சமயத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்படும்.
நரசிம்மர் சிலையின் அருகில் லட்சுமி தேவி சிலை உள்ளது. இந்த கோவில் வட கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. கோவில் பல நுாற்றாண்டுகளை தாண்டி நிலைத்து நிற்கிறது. இதற்கு அங்குள்ள கல் வெட்டுகளே சான்று. அதே சமயம், காலத்திற்கேற்ப கோவில் புது பொலிவடைந்து கொண்டே வருகிறது என்பது மற்றொரு சிறப்பு. இந்த கோவிலில், மாணவர்கள் பரீட்சைக்கு போவதற்கு முன் வந்து வேண்டி கொள்வர். தங்கள் பேனாக்களை வைத்து வழிபட்டு செல்வர். இங்கு வந்து வேண்டி கொண்டு தேர்வு எழுதினால், தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என நம்புகின்றனர். காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கப்படுகிறது. – நமது நிருபர் –