மஹாலட்சுமி லே – அவுட் குருவாயூரப்பன் கோவில்
கேரளாவின் திருச்சூர் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உலக புகழ் பெற்றது. இக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாதோரின் வசதிக்காக, குருவாயூரப்பன் சேவா மண்டலி சார்பில், பல மாநிலங்களில் குருவாயூர் கோவில்கள் கட்டப்பட்டு உள்ளன.
பெங்களூரில், பெங்களூரு – புனே தேசிய நெடுஞ்சாலையில், ‘வெஸ்ட் ஆப் காட் ரோடு மஹாலட்சுமி லே – அவுட்டிலும், கனகபுரா அருகே நெட்டிகெரே கிராமத்திலும், ஸ்ரீ குருவாயூரப்பன் கோவில்கள் உள்ளன. பெங்களூரில் வசிக்கும் கேரள மாநிலத்தினர், இந்த இரு கோவில்களுக்கும் அடிக்கடி சென்று வருகின்றனர். மஹாலட்சுமி லே – அவுட்டில் உள்ள குருவாயூரப்பன் கோவில், ‘இஸ்கான்’ கோவிலுக்கு நேர் எதிரே இருப்பது இன்னொரு சிறப்பு. இஸ்கானில் தரிசனம் செய்யும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் எதிர் பக்கத்தை இணைக்கும் நடைமேடை வழியாக சென்று, குருவாயூரப்பன் கோவிலுக்கும் செல்கின்றனர். இக்கோவிலில் உள்ள கிருஷ்ணர் சிலை, கேரளாவின் குருவாயூர் கோவிலில் உள்ள கிருஷ்ணர் சிலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்து உள்ளது. பெங்களூரில் இருந்து குருவாயூருக்கு சென்று கிருஷ்ணரை தரிசனம் செய்ய முடியாதவர்கள், இந்த கோவிலுக்கு சென்று கிருஷ்ணரை தரிசிக்கின்றனர். கிருஷ்ணர் சிலை மட்டுமின்றி ஆதிலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, தைரிய லட்சுமி, வித்யலட்சுமி என அஷ்டலட்சுமி சிலைகளும் அமைந்து உள்ளது சிறப்பு. ராமானுச்சாரியார் சிலையும் இங்கு உள்ளது.
கோவிலின் கோபுரம் பக்தர்கள் கவரும் வகையில் அழகிய சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ கிருஷ் ணர் ஜெயந்தி வெகுவிமரிசை யாக கொண்டாடப்படுகிறது. தினமும் காலை 8:30 மணி முதல் 11:30 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும். மெஜஸ்டிக் உள்ளிட்ட பகுதியில் இருந்து பி.எம்.டி.சி., பஸ்சில் செல்வோர், யஷ்வந்த்பூர் செல்லும் பஸ்சில் சென்று, சாண்டல்சோப் பேக்டரி பஸ் நிலையத்தில் இறங்கி கொள்ளலாம். மெட்ரோ ரயிலில் சென்றால் சாண்டல்சோப் பேக்டரி அல்லது மஹாலட்சுமி லே – அவுட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 5 நிமிடம் நடந்து கோவிலுக்கு செல்லலாம். கோவில் அருகில் பார்க்கிங் வசதியும் உள்ளது. – நமது நிருபர் –