வரம் அளிக்கும் தொன்டாலு சோமேஸ்வரர்
மைசூரு மாவட்டத்தை ‘கோவில்களின் உலகம்’ என்றே கூறலாம். இங்கு அரண்மனைகள் மட்டுமின்றி, புராதன பிரசித்தி பெற்ற அற்புதமான கோவில்களும் உள்ளன. இதில் தொன்டாலு சோமேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்.
மைசூரில் ஹொய்சாளர், கங்கர்கள் உட்பட பல்வேறு மன்னர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் கலை நயத்துடனும், கட்டட கலைக்கு சான்றாகவும் அமைந்துள்ளன. இன்றைய பொறியாளர்களுக்கு சவால் விடும் வகையில் உள்ளன. குறிப்பாக அனைத்து கோவில்களிலும், அற்புதமான சிற்பங்களையும் காணலாம். சிற்பிகளின் கை வண்ணத்தை பார்த்து, ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. அர்ப்பணிப்பு மற்ற மன்னர்களுடன் ஒப்பிட்டால், ஹொய்சாளர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களின் எண்ணிக்கை அதிகம். இவர்கள் சிவனை ஆராதிப்பவர்கள் என்பதால், அதிகமான சிவன் கோவில்களை கட்டியுள்ளனர். தொன்டாலு சோமேஸ்வரர் கோவில், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இந்த கோவில் பக்தர்களை தன் வசம் சுண்டி இழுக்கிறது.
மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவில் தொன்டாலு கிராமத்தில் சோமேஸ்வரர் கோவில் உள்ளது. லட்சுமண தீர்த்தா ஆற்றங்கரையில் குடிகொண்டுள்ள சோமேஸ்வரர், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்தாலும், தினமும் தவறாமல் பூஜைகள் நடக்கின்றன. கண்களுக்கும், மனதுக்கும் இதமளிக்கும் பசுமையான இயற்கை காட்சிகள் நிறைந்த, அமைதியான சூழ்நிலையில் கோவில் அமைந்துள்ளது. ஹொய்சாளர் மன்னர் விஷ்ணுவர்த்தன் மகன் நரசிம்மன் ஆட்சியில் தொன்டாலு கிராமத்தில் சோமேஸ்வரர் கோவில் கட்டப்பட்டதாக, வரலாற்று சாசனங்கள் கூறுகின்றன. அவ ரை தொடர்ந்து ஆட்சி பொறுப்புக்கு வந்த ஹரதகாவுன்டா, காளேயசாவ்வந்தகாவுன்டா, அவரது சகோதரர்களின் ஐந்து மகன்கள், கோவிலை மேம்படுத்தியதுடன் ஏரியும் அமைத்தனர். சுற்றியுள்ள வயல்வெளி நிலங்களை கோவிலுக்கு தானம் செய்தார்களாம். 17ம் நுாற்றாண்டில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. மூன்று கால பூஜை சமீப ஆண்டுகளில் புதிதாக மூலஸ்தானம், கோவிலின் மீது கோபுரம் கட்டப்பட்டது. தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து, சிவனை தரிசிக்கின்றனர்.
அர்ச்சகர் மூன்று கால பூஜைகள் செய்கிறார். ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். பார்ப்பதற்கு சிறிய கோவிலாக தெரிந்தாலும், இங்குள்ள சிவன் அபார சக்தி கொண்டவர். இன்றைக்கும் கிராமத்தினரை காவல் காப்பதாக நம்பப்படுகிறது. வாழ்க்கையில் தொடர் பிரச்னைகளால் மனம் நொந்துள்ளவர்கள், தொன்டாலு சோமேஸ்வரர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தால், பிரச்னைகள் சரியாகும்; மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம். அமைதியான சூழலில் கோவில் அமைந்துள்ளதால், இங்கு வரும் பக்தர்களின் மனதுக்கும் அமைதி, நிம்மதி கிடைக்கிறது. – நமது நிருபர் –