பூரண சரணாகதி ஒன்றே மோட்சத்திற்கான மார்க்கம்; ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் மார்கழி மாத நிகழ்ச்சியில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்பு ஓய்வு பெற்ற நீதிபதி ராமப்பத்திரன் தாதம் உபன்யாசம் நடைபெற்றது.
இன்று 10ம் நாளில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய உபன்யாசம்: திருப்பாவையின் 10ம் பாசுரத்தில் க்ருத- க்ருத்யத்வம் என்ற சித்த சாதனை எனும் தர்மம் சொல்லப்படுகிறது. நமக்கு விதிக்கப்பட்ட ஸ்வதர்மங்களைச் சரியாகப் பண்ணினாலேயே ஒரு கவலையும் இல்லாமல் இருக்கலாம் என்பதை உள்ளுரைப் பொருளாகக் காட்டும் பாசுரம் இது. பகவானை நாடி எல்லாரும் செல்லும் போது, தன் கர்ம யோகங்களினால் பகவான் தன்னிடம் வருவான் என, இருக்கும் பெண்ணை எழுப்பி, பகவதனுபவம் பெற சத்சங்கத்திற்கு ஆண்டாள் அழைப்பதாக 10ம் பாசுரத்தின் பொதுவான பொருள் அமையும். இப்பாசுரத்தில் எழுப்பப்படும் தோழி, அஷ்டாங்க யோகம், ஹடயோகம் முதலியவற்றைச் செய்து, பிற தேவதைகளைப் பூஜித்து, சுவர்கம் முதலான சில இன்பங்களை அடைவதற்கு வேண்டிய வழிகளில் சென்று கொண்டிருப்பவள் என்பதால், நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் அம்மா என்று விளித்துள்ளார். இந்த தோழியைத் சரணாகதி அல்லாமல் பிற வழிகளில் எம்பெருமானை அடைய முயலாதே என்று திருத்திப் பணிகொண்டு தடுத்தாட்கொள்ள ஆண்டாள் அழைக்கிறாள் என்றும் பொருள் கொள்ளலாம். பரம பவித்திரமான பகவானை அடைய அவன் நாமங்களைப் பாடி அனுபவித்து சரணாகதி செய்வதைவிட்டு, உடல் வருத்தி பல யோகங்களை செய்ய வேண்டுமோ என்று விளிப்பது போல் இருக்கிறது. சரணாகதி செய்து பரமாத்மாவை அணுகுவதன் மூலம் தான் நிலையான இன்பத்தை பெற முடியும் என்பதை வேதாந்தமாக விளக்குவதாகவும் இந்தப் பாசுர வரிகளுக்குப் பொருள் கொள்ளலாம். பூரண சரணாகதி ஒன்றே மோட்சத்திற்கான ஒரே மார்க்கம் என்பதையும், பக்தியும், பகவத் சேவையும், கைகோர்த்து இருக்க வேண்டிய அவசியத்தையும் கோதை நாச்சியார் கற்றறிந்த வைணவ அடியார்களுக்குத் தரும் உபதேசமாக ஆண்டாள் அருளியுள்ளாள்’ என்றார்.
உபன்யாசம் நேரம் மார்கழி மாகோற்சவ உபன்யாசம் அடுத்த மாதம் 14ம் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை உபன்யாசத்தை கேட்கலாம்.