உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுசு : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026

தனுசு : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026

மூலம்: நிதானம் அவசியம்


ஞான மோட்சக் காரகனான கேது, தன, ஞானக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு,  2026 ம் ஆண்டு நிதானமாக செயல்பட வேண்டிய ஆண்டாகும். ஒரு பக்கம், எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். நினைத்தது நடந்தேறும். செல்வாக்கு உயரும். பணம், பொருள் சேரும். ஆனால்  மறுபக்கம் தொழில், வேலையில் கவனமாக இருப்பது அவசியம். 


சனி சஞ்சாரம் 

கடந்த இரண்டரை ஆண்டாக சகாய சனியாக சஞ்சரித்து மனதில் துணிவையும், எடுக்கும் முயற்சியில் வெற்றியும், வேகமாக செயல்படக்கூடிய வலிமையும் வழங்கிய சனி, மார்ச் 6 முதல் 4 ம் இடத்தில் அர்த்தாஷ்டமச்சனியாக சஞ்சரித்து பலன் வழங்க இருப்பதால், வேலைப்பளு அதிகரிக்கும். எளிய வேலைக்கும் கடுமையான முயற்சி தேவைப்படும். உழைப்பின் காரணமாக உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் ஏற்படலாம். தாய்வழி உறவுகளிடம் இடைவெளி ஏற்படும். சனியின் 7 ம் பார்வை ஜீவன ஸ்தானத்திற்கும், 10 ம் பார்வை ராசிக்கும் உண்டாவதால் வேலையில் கவனம் தேவை. தொழிலில் அதிகபட்ச அக்கறை தேவைப்படும். உடல்நிலையில் கூடுதல் கவனம் கொள்வது நல்லது. 


ராகு, கேது சஞ்சாரம் 

நவ.12 வரை சகாய ஸ்தானத்தில் ராகு, பாக்கிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், மலை போல உயர்ந்து நிற்பீர்கள். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். அந்தஸ்து உயரும். தெய்வ அருளும் பெரிய மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும். வியாபாரம், தொழில், ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். விஐபிகள் வரிசையில் உங்களுக்கு இடம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நவ.13 முதல் ராகு குடும்ப ஸ்தானத்திலும், கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், தொழில், வேலை, குடும்பம், வரவு செலவு, உடல்நிலை என அனைத்திலும் கவனமாக இருப்பது அவசியம்.


குரு சஞ்சாரம்

மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக  சஞ்சரிப்பதால், மே 25 வரை சப்தம குருவும் அவரது பார்வையும் உங்கள் நிலையை உயர்த்தும். தடைபட்ட வேலை நடக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், தொழிலில் லாபம், பணப்புழக்கம் என உங்கள் நிலை சிறப்பாக இருக்கும். மே 26 முதல் அஷ்டம குருவால்  உங்கள் வேலைகளில் தடுமாற்றம், கவனக்குறைவு ஏற்படும். நான்காமிட சனிக்கு அவர் பார்வை உண்டாவதால் அர்த்தாஷ்டமச்சனியின் பாதிப்பு உங்களை நெருங்காது. அக். 20 முதல் அதிசாரமாக பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு மீண்டும் யோகத்தை அளிப்பார். பணம், புகழ், செல்வாக்கு, ஆரோக்கியம் ஆகியவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்.


சூரிய சஞ்சாரம்

பிப். 13 – மார்ச். 14, மே. 15 –  ஜூன் 14 காலங்களிலும், செப்.18 – நவ.16 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும்  சூரியன் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். வியாபாரம், தொழில், வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உடலில் ஏற்பட்ட சங்கடம், தொழிலில் போட்டி, வாழ்வில் உண்டான பகை அனைத்தும் மறையும். நீங்கள் எதிர்பார்த்த வெற்றியும், ஆதாயமும் கிடைக்கும். தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும்  முயற்சி வெற்றி பெறும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி பெறும். 


பொதுப்பலன்  

2026 ம் ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். நீண்டநாள் முயற்சி வெற்றி பெறும். நெருக்கடி விலகும். வியாபாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். கடன் தொல்லை விலகும். பொருளாதார நிலை உயரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.


தொழில் 

தொழிலில் கூடுதல் கவனம் தேவை. பிறரை நம்பி எந்த வேலை, நிர்வாக பணிகளை ஒப்படைக்க வேண்டாம். ஒவ்வொன்றிலும் உங்கள் கண்காணிப்பு அவசியம். மருத்துவம், ஆன்மிகம், பைனான்ஸ், ஜூவல்லரி தொழில்கள் முன்னேற்றம் பெறும். வழக்கறிஞர், நீதிபதி, ஆசிரியர், அமைச்சர்கள், ஆன்மிகப் பணியாளர்கள், மதப் பிரச்சாரகர்கள், மருத்துவர்கள், புரோகிதர்கள் இந்த ஆண்டில் முன்னேற்றம் காண்பர். 


பணியாளர்கள்

உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஏற்ற மரியாதை உண்டாகும். வேலையில் அக்கறையுடன் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். அரசு பணியாளர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவது அவசியம். ஜீவன ஸ்தானத்தை சனி பார்ப்பதால் யாருடைய சிபாரிசுக்கும் இப்போது இடம் கொடுக்க வேண்டாம். அதனால் சங்கடங்களை சந்திக்க நேரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம்.


பெண்கள்

ஆண்டின் தொடக்கத்திலேயே குருபார்வை உண்டாவதால் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். கணவரின் ஆதரவு கூடும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். தைரியமாக செயல்பட்டு குடும்பத்தை வழிநடத்தும் சக்தி ஏற்படும். புதிய சொத்து, வாகனம், பொன், பொருள் என கனவு நனவாகும். ஆனால் உடல் நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.


கல்வி 

படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. பொழுது போக்கு, நட்பு, விளையாட்டு என்பதையெல்லாம் தேர்வு வரையில் ஒத்தி வைப்பதும், ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதும் நன்மையாகும்.


உடல்நிலை

மார்ச் 6 முதல் சுக ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதுடன் அவருடைய பார்வையும் ராசிக்கு உண்டாவதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. தொற்று நோய், பரம்பரை நோயால் சிலர் சங்கடப்பட நேரும்.  உணவு, உறக்கம், ஒழுக்கத்தில் கவனமாக இருப்பது அவசியம்.


குடும்பம்

குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். நீண்ட நாள் கனவு நனவாகும். புதிய வாகனம், வீடு வாங்கும் நிலை 

உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். பொன், பொருள் சேரும். சேமிப்பு உயரும்.


பரிகாரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட நன்மை நடக்கும். நெருக்கடி மறையும்.


பூராடம்: நினைப்பது நடக்கும்


அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், தனக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 ம் ஆண்டு முயற்சியால் வெற்றி பெறும் ஆண்டாக அமையும். நீங்கள் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய வாரிசு வீட்டிற்கு வரும். உங்கள் செல்வாக்கை உலகமே உணரும்.


சனி சஞ்சாரம் 

 தன குடும்பாதிபதியும், சகாய ஸ்தானாதிபதியுமான சனி மார்ச் 5 வரை  முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பார். மார்ச் 6 முதல் உங்கள் ராசிநாதனின் வீடான மீனத்தில்

 அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்து பலன் வழங்க இருக்கிறார். சனிக்கு மீனம் நட்பான வீடு என்றாலும், கர்மக் காரகனான சனி நீதிபதியைப்போல் பாவ புண்ணிய நிலையறிந்து பலன் தருபவராக இருக்கிறார். இக்காலத்தில் தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் தவறு ஏற்படாதபடி நடக்க வேண்டும். எதிலும் கடும்முயற்சி தேவைப்படும். உடல்நிலையிலும்  மறைந்திருந்த பாதிப்பு வெளிப்பட ஆரம்பிக்கும். தாயாரின் உடல்நிலையில் சங்கடம் தோன்றும். தாய்வழி உறவுகளுடன் இடைவெளி ஏற்படும். சனியின் பார்வை ஜீவன ஸ்தானத்திற்கும், ஜென்ம ராசிக்கும் உண்டாவதால்

 பணியாளர்கள் வேலையில் தவறு ஏற்படாதபடி நடக்க வேண்டும். நிதானமாக செயல்பட வேண்டும். உடல்நிலையில் கவனம் தேவை. 


ராகு, கேது சஞ்சாரம்


நவ.12 வரை ராகு, கேது சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்ததை சாதிக்க முடியும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பொது வாழ்க்கை, அரசியலில் ஈடுபடுபவர்கள் செல்வாக்கு காண்பர். பெரியோர் ஆதரவும், தெய்வ அருளும் உங்களை வழிநடத்தும். நவ.13 முதல் ராகு, கேது சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் எதிலும் நிதானம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வதும், உடல்நிலையில் கவனமாக இருப்பதும் அவசியம்.


குரு சஞ்சாரம்


மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சென்று சஞ்சரிப்பதால் 

மே 25 வரை உங்கள் நிலை எல்லா வகையிலும் உயரும். உங்களை அலட்சியமாக பார்த்தவர்கள் எதிரில் செல்வாக்குடன் வாழ்வீர்கள். பணம், பொன், பொருள் சேரும். தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். இளம் வயதினருக்கு திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் ஏற்படும். தடைபட்ட வேலை நடக்கும். மே 26 அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வை நான்காமிட சனிக்கு உண்டாவதால் அர்த்தாஷ்டமச்சனியின் பாதிப்பு இக்காலத்தில் நெருங்காது. வீண்செலவு, மருத்துவச்செலவு குறையும். கையில் பணம் புழங்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். அக். 20 முதல் அதிசாரமாக பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சி நடக்கும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். திருமணம், குழந்தை பாக்கியம், சுய தொழில் கனவுகள் நனவாகும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர்.  எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.


சூரிய சஞ்சாரம்


பிப்.13 – மார்ச் 14, மே15 – ஜூன்14 காலங்களிலும், செப்.18 – நவ.16 காலத்திலும் உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான சூரியனால் உங்கள் நிலை உயரும். நீங்கள் சந்தித்த நெருக்கடி மறையும். முயற்சி ஒவ்வொன்றும் வெற்றியாகும். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். அரசு வழி முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.


பொதுப்பலன்


2026 ம் ஆண்டு நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஆண்டாக இருக்கும் முயற்சியால் எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாள் கனவு நனவாகும். சமூகத்தில் உங்களுக்கென நிலையான இடம் உருவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.


தொழில்


தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். பார்க்காமல் கெட்டது பயிர், கேட்காமல் கெட்டது கடன் என்ற வார்த்தைகளை இந்த ஆண்டில் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்பிக்கையானவர் என்று நீங்கள் நினைப்பவர்களையும் உங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பதால் தொழிலில் வரும் லாபம் உங்களிடம் வந்து சேரும். சினிமா, தொலைக்காட்சி, வலைதளம், உணவகம், விடுதி, திருமண மண்டபம், டிராவல் ஏஜன்சி, ஜவுளி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை, பைனான்ஸ், ஜூவல்லரி தொழில்கள் முன்னேற்றம் அடையும், வழக்கறிஞர், நீதிபதி, ஆசிரியர், அமைச்சர்கள், ஆன்மிகப் பணியாளர்கள், மதப்பிரச்சாரகர்கள், வைத்தியர்கள், புரோகிதர்கள், கலைஞர்கள், பொறியாளர்கள் முன்னேற்றம் காண்பர்.


பணியாளர்கள்


ஜீவன ஸ்தானத்தை சனி பார்ப்பதால் உங்கள் உழைப்பிற்குரிய மரியாதை,  சலுகையை இந்த ஆண்டில் எதிர்ப்பார்க்கலாம். பொறுப்பாக வேலை பார்ப்பவர்களுக்கு நிர்வாகத்தின் அங்கீகாரம் கிடைக்கும். வேலையின் மீதிருந்த பயம் விலகும். அரசு பணியாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு விதிமுறைகளை மீறாமல் செயல்படுவது நல்லது. விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.


பெண்கள்


இதுவரை இருந்த நெருக்கடிகள், பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் நிம்மதி உண்டாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என அவரவர் வயதிற்கேற்ற எதிர்பார்ப்பு நிறைவேறும்.  கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். புதிய சொத்து, வாகனம், பொன், பொருள் என்று கனவுகள்  நனவாகும்.


கல்வி


தேர்வுக்கு முன் படிப்பில் முழு கவனம் செலுத்துவது நல்லது. நான்காமிட சனியால் தடைகள் ஏற்படவோ அல்லது மதிப்பெண் குறையவோ வாய்ப்பிருப்பதால் ஆசிரியர்கள் ஆலோசனையும், படிப்பில் முழு கவனமும் இந்த நேரத்தில் அவசியம்.


உடல்நிலை 

உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றும். மருத்துவத்திற்கு அடங்கியிருந்த நோய்கள் மீண்டும் வெளிப்படும். பரம்பரை நோய், தொற்று நோய், சிறுநீரக நோய், சுவாசக் கோளாறு, சிலருக்கு ரகசிய நோய்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உணவில் தொடங்கி பழக்க வழக்கம் வரையில் அனைத்திலும் கவனம் தேவை.


குடும்பம்: ராசி நாதனின் சஞ்சாரமும், பார்வைகளும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் என கனவுகள் நனவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும்.


பரிகாரம்: வீரபத்திரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். நன்மை உண்டாகும்.


உத்திராடம்: நல்ல நேரம் வந்தாச்சு


ஆத்ம காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான தனுசுவில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர். 2026ம் ஆண்டில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, சின்னச்சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் பணவரவு, அந்தஸ்து, கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவி என்பதெல்லாம் தேடி வரும். நினைத்தது நடந்தேறும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரை ஆண்டு காலமாக அனுபவித்த நெருக்கடி, சந்தித்த போராட்டம், ஏற்பட்ட அவமானம் எல்லாம் விலகும். இழந்த செல்வாக்கு, சொத்து, அந்தஸ்து, பதவி எல்லாம் மீண்டும் கிடைக்கும்.


சனி சஞ்சாரம்

 உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 5 வரை யோகப்பலன் வழங்குவார் சனி. தைரியமாக செயல்பட வைப்பார். மார்ச் 6 முதல் அர்த்தாஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால், உழைப்பு அதிகரிக்கும். அதன் காரணமாக சிலருக்கு உடல்நிலை பாதிக்கும். வேலையில் ஏதேனும் பிரச்னை தோன்றிக் கொண்டே இருக்கும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சி இழுபறியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 முதல் சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கப் போவதால் ஏழரைச்சனியின் பிடியில் இருந்து வெளியில் வரப் போகிறீர்கள். இனி எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடந்தேறும். வருமானம் உயரும். வசதி அதிகரிக்கும்.


ராகு, கேது சஞ்சாரம்


நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும். நவ.13 முதல் வரவு செலவிலும், சுய ஒழுக்கத்திலும், உடல்நிலையிலும் கவனமாக இருக்க வேண்டும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்கள் ஆண்டு முழுவதும்  நிதானமாக இருப்பதுடன் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதும் தவறான நட்புகளை ஒதுக்கி வைப்பதும், உடல்நிலையில் கவனமாக இருப்பதும் நன்மை தரும்.


குரு சஞ்சாரம்


மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக  சஞ்சரிப்பதால், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு

 மே 25 வரை ராசிக்கு குருபார்வை கிடைப்பதால்  செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். மே 26 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வையால் நன்மை உண்டாகும். சனியால் உண்டாகும் பாதிப்பு விலகும். அக்.20 முதல் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் செல்வாக்கு உயரும். திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

 தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு

 மே25 வரை எதிர்ப்பு, நோயை ஏற்படுத்தினாலும், மே 26 முதல் வெற்றி, தொழிலில் லாபம், வேலையில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வாக்கு என்ற நி்லை ஏற்படும். அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் செலவு குறையும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். 


சூரிய சஞ்சாரம் 

உத்திராடம்1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு

 பிப்.13 – மார்ச் 14, மே 15 – ஜூன் 14 காலங்களிலும், செப். 18 – நவ.16 காலத்திலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 – ஏப்.13, ஜூன் 15 – ஜூலை 16 காலங்களிலும், அக்.18 – டிச.15 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்ப்பு, பகை, போட்டி, வழக்கு என்ற நிலை மாறும்.  செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.


பொதுப்பலன்


2026ல் எதிர்பார்ப்பு நிறைவேறும்.  நீண்டநாள் போராட்டம் முடிவிற்கு வரும். தலை நிமிர்ந்து வாழும் நிலை ஏற்படும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்கி லாபமடைவர். பணம், புகழ், பதவி, பட்டம் என்ற கனவுகள் நனவாகும்.


தொழில்


தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் உயரும். நிதி நிறுவனம், உதிரி பாகம் தயாரிப்பு, விற்பனை, இயந்திர தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், ஜூவல்லரி தொழில்கள் முன்னேற்றமடையும்.


பணியாளர்கள்


அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகமாக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு  நெருக்கடிகள் விலகும்.


பெண்கள்


குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். விவாகரத்து வரை சென்றவர்களும் சமாதானம் அடைவர். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலையில் நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். குழந்தைகள் மீது அக்கறை அதிகரிக்கும்.


கல்வி


படிப்பில் அக்கறை தேவை. தேர்வு நேரத்தில் பார்க்கலாம் என்ற அலட்சியம் வேண்டாம். ஆசிரியர்கள் ஆலோசனையை கவனமாக ஏற்பவர்களுக்கு தேர்வு முடிவுகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.


உடல்நிலை

உடல்நிலையில் அக்கறை தேவை.  வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும், சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது அவசியம். சிலர் தொற்று நோய்க்கு ஆளாகக்கூடும். பரம்பரை நோயின் வீரியமும் இருக்கும். என்ன நோய் என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு மருத்துவராக சந்திக்கும் நிலை வரலாம். 


குடும்பம்


குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் மறையும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும். பிள்ளைகளுக்கு வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


பரிகாரம் : அபிராமியம்மன், அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !