மார்கழி இசையில் விருந்து படைத்த நிஷா ராஜகோபால்
நிஷா ராஜகோபால், முதல் நாள் மாலை 4:00 மணிக்கு பார்த்தசாரதி ஸ்வாமி சபா கச்சேரியிலும், மறுநாள் காலை 6:00 மணிக்கு வியெஸ்யெஸ் பவுண்டேஷனுடைய மயிலாப்பூர் கச்சேரியிலும் உருப்படிகளோ, ராகங்களோ ஒன்றுகூட மறு ஒலிபரப்பாகாமல், பிரமாதமாகப் பாடினார். மாலைக் கச்சேரியில் தீக் ஷதர், கோபாலகிருஷ்ண பாரதி, மைசூர் வாசுதேவாச்சார், பொன்னையா பிள்ளை (நீலாம்பரி ராகத்தில் தெலுங்குக் கிருதி), பாபநாசம் சிவன், தியாகையர் என்று பல்வகை இசைக் கர்த்தாக்களின், பல்வேறு ராகக் கிருதிகளைக் கையாண்டு, ‘அபங்’ வகையில், ‘பிம்ப்ளாஸ்’ ராகத்தில், பானுதாஸரின் மராத்தி பாடலுக்குப் பின், துளசிதாசரின் ஹனுமான் சாலிஸாவில் முடித்துக்கொண்டார். ஆலாபனைக்கு எடுத்துக்கொண்ட சிம்மேந்திர மத்தியமம் (நின்னே நம்மித்தி கிருதி) கேதாரகவுளை (துளசி வில்வ கிருதி) ராகங்களில், லகுவான ஸ்வர ஏற்ற இறக்கங்களுடனும், சஞ்சாரங்களில் குரல் பிசிறல்களோ கற்பனைக் குறைவோ இன்றி, அருமையான இசையை வழங்கினார். கேதாரகவுளையில் குறிப்பாக எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தனிப்பட்ட தரஸ்தாயி தொடக்கத்தை (கிருதி சரணத்தில் பரமாநந்தமுதோ எனும் இடத்தில் இசைத்தொலிக்கும் சஞ்சாரங்கள்) சுவீகரித்து விரித்தது ரசிக்கத்தக்க அனுபவம். மறுநாள் காலை ஆபேரி ஷண்முகப்பிரியா ராகங்களில் செய்த ஆலாபனைகளில் நல்ல தேர்ச்சி. நிரவல் ஸ்வரங்களில் சீரான, வளமான கற்பனை. நிஷாவிடம் ஓங்கி ஒலிக்கையிலும் குரலில் மதுரமான செவ்வியல் சவுக்கியமான இசையே வெளிப்படுவது நிறைவு.
சுமித்ரா வாசுதேவ், ராக சுதா அரங்கில் வழங்கிய மாலைக் கச்சேரி, செவ்வியல் இசையடர்வு மிக்க இதமான அனுபவம். பைரவி ராக ‘விரிபோணி’ வர்ணத்தில் தொடங்கினார். வழக்கமான இரண்டைக் கடந்த மூன்றாவது சிட்டை ஸ்வரக் கட்டாகட்டும், அரிதாகவே மேடையில் வழங்கப்படும் சரணங்கள் ஆகட்டும், தன் பாண்டித்தியமான பாடாந்தரத்தைத் தொடக்கத்திலேயே வெளிப்படுத்தினார். பாபநாசம் சிவனின் ‘கந்தா வந்தருள்’ கிருதியிலும் அதற்கான ஆலாபனையிலும், ஆபேரி ராகத்தை ‘சுத்த தைவதம்’ கொண்ட தொன்மையான வடிவில் வழங்கியதிலும், இப்பாண்டித்தியம் வெளிப்பட்டது. கீர்வாணி ராகத்தில் (கீரவாணி இல்லை, இது கவாம்போதி எனும் மேளகர்த்தா ராகம்) தீக் ஷதரின் கிருதிக்குப் பின், சங்கராபரணம் ராகம் விரிவான ஆலாபனை. சங்கராச்சார்யம் எனத் தொடங்கும் கிருதியை ஆதி தாளம் இரண்டு களை சவுக்கத்தில் விரித்து, நிரவல் ஸ்வரகல்பனைகள் செய்து முடித்தார். அருண் பிரகாஷ் தனி ஆவர்த்தனத்தை, கணக்குகளுடனேயே கண்ட நடையில் தொடங்கி அசத்தினார். வழக்கம்போல மருதாணி அப்பிய விரல்களின் மென்மையான வாசிப்பைக் கச்சேரி முழுதும் வெளிப்படுத்தினார். சுமித்ராவின் குரல் சுவாசக் கட்டுப்பாடுகள் அபாரம். ஆலாபனை நிரவல் ஸ்வரகல்பனை என்று அனைத்து அங்கங்களும், கூச்சலோ கீச்சுக்குரலோ இன்றி மதுரமாகவே வெளிப்படுகின்றன. அகாரங்களில் அளவுக்கதிகமான திளைத்தல்களோ ராக ஸ்வரங்களில் ஏறி இறங்கும் கற்பனை வறட்சிப் பாசாங்குகளோ கிடையாது. சுமித்திராவின் கலை பாரம்பர்ய செவ்வியல் இசைவடிவம் என்றால், குலையாமல் அதைப் படைப்பூக்கத்துடன் வெளிப்படுத்தும் அவர் திறன், வேதவல்லியின் பாடாந்தரத்தில் பத்திரமாகப் பொதிந்துள்ளது. ரசிகர்கள் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நல்லிசை விருந்தை இவரிடம் எதிர்பார்க்கலாம்.
இசையினுள் புதுமை செய்கிறார் ரித்விக்
முத்துஸ்வாமி தீக் ஷதரின் 250ஆவது நினைவாண்டு என்பதால், இசைவிழாவில் இவரது கிருதிகளுக்குச் சிறப்பிடம் கொடுத்துப் பாடுகிறார்கள். அகடெமி காலைக் கச்சேரியில், ரித்விக் ராஜா தீக் ஷதரின் சதுர்தஸ ராகமாலிகாவில் (14 ராகங்களில்) அமைந்த ‘ஸ்ரீ விஸ்வநாதம் பஜரே’ கிருதியை நிதானமாகவும் நிறைவாகவும் பாடினார். கிருதிக்கு முன் 14 ராகங்களிலும் கச்சிதமாக ஆலாபனை வழங்கியது அசத்தல். முனைப்போடு உழைத்தால் செவ்வியல் வடிவம் குலையாமல், நம் இசையினுள் எத்தனை புதுமைகளைச் செய்யலாம் என்பதற்கு, ரித்விக்கின் இம்முயற்சி சான்று. பலே. பந்துவராளி ராகம் தானத்திற்கு அடுத்து, ‘காணக் கிடைக்குமோ சபேசன் தரிசனம் கண்டால் கலி தீருமே’ என்று பல்லவியை விரித்து முடிக்கும் முன்னர் நேரம் தீர்ந்துவிட்டது.
அஸ்வத் நாராயணனின் குரல் கிட்டத்தட்ட இளவயது ‘கே.வி.என்.,’ குரலென ஒலிக்கிறது. பிரமாதமான செவ்வியல் வழுவாத சங்கீதம். காலைக் கச்சேரியில் வஸந்தா ராகத்தில் நிரவல் அரை ஆவர்த்த ஸ்வரங்கள் அசத்தல் என்றால், சிந்தாமணி ஸ்ரீரஞ்சனி போன்ற ராகங்களின் தேர்வு நல்ல ரசனை. அடுத்த மாலை வித்திய பாரதி கச்சேரியில், மெயின் உருப்படி சங்கராபரணம். சரோஜதளநேத்ரி கிருதியில் ‘சாமகானவிநோதினி’ என்கிற இடத்தில் நிரவல் ஸ்வரங்கள். வயலின் கமலகிரண் வாங்கி வாசிப்பதில் தேர்ச்சியைக் காட்டினார். அனுபவஸ்தரான கே.வி.கோபாலகிருஷ்ணன் கஞ்சீராவில் கச்சிதமான துணை வழங்கினார். இந்தக் கச்சேரியின் உயரொளி என்றால், அது தேவகாந்தாரி ராக ஆலாபனை. ஆரபியும் தேவகாந்தாரியும் ஆண் – -பெண் இரட்டையர் போன்ற ராகங்கள். அஸ்வத்தின் கற்பனைக் கட்டமைப்பில், தேவகாந்தாரி ராக ஆலாபனை ஒரு இடத்திலும் ஆரபி எனத் தோன்றாத வகையில் அமைந்தது சிறப்பு. அஸ்வத் நாராயணனின் கச்சேரியில், விரிவுரையோ எனும் வகையான பேச்சுக்களோ, பாட்டின் பாதி வரிக்கிடையே, அநாவசிய நீள் விளக்கங்களோ கிடையாது. இசையே மேலோங்கிப் பேசுகிறது. கிளரொளியிளமை கெடுவதன் முன்னம் கேட்டு ரசிப்போம், இத்தகைய செவ்வியலிசையை.
நிரவல்களில் நிதானம்
ராக சுதா அரங்கில் மூத்த கலைஞர் சுகுணா வரதாசாரி, வி.பரத்குமாருடன் இணைந்து பாடிய கச்சேரியில், பாபநாசம் சிவனின் சம்ஸ்கிருத மொழிக் கிருதிகள் பலவற்றை வழங்கினார். ஆலாபனைகளுக்கு சாமா கல்யாணி கரஹரபிரியா ராகங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. சுகுணா வரதாசாரி தன் தில்லைஸ்தானப் பாடாந்தரப் பக்குவத்தை நிலைநாட்டினார். உடன் பாடிய பரத் குமார், அனைத்து வாய்ப்புகளிலும் அபாரமான குரல் கட்டுப்பாட்டையும், கற்பனை வளத்தையும் வெளிப்படுத்தினார். நிரவல்களை இவ்வளவு நிதானமாகவும், சலிப்பூட்டாமலும் செய்யமுடியுமா என வியக்கையில், சவுக்கியமான இசை உற்சாகமான மேல்காலங்களையும், சில ஆவர்த்தனங்கள் தொட்டுக்காட்டின. உடன், வயலின் வாசித்தவர் இவ்வாண்டு சங்கீத கலாநிதி ஆர்.கே.ஸ்ரீராம்குமார். பாட்டு மேம்பாட்டு என்றால் வயலின் தாலாட்டு. அருண் பிரகாஷ் மிருதங்கத்தில், கச்சேரி முழுதும் அனுமானித்து அணைத்து வாசித்தார்.