உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

காரமடை அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

மேட்டுப்பாளையம்:வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோயில். கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம் கடந்த, 20ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் அரங்கநாதர் சுவாமி முன், கோயில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் பாசுரங்களை பாடி வந்தனர். 29ம் தேதி இரவு நாச்சியார் திருக்கோலத்தில் அரங்கநாத பெருமாள் எழுந்தருளினார்.

இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை, 3:00 மணிக்கு கோயில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. பின்பு உற்சவர் அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.சிறப்பு பூஜை செய்த பின் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது. காலை, 5:45 மணிக்கு வாசல் முன்பு நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர் ஆகிய மூன்று ஆழ்வார்கள் எதிர்கொண்டு அரங்கநாத பெருமாளை சேவித்தனர். பின்பு மூன்று ஆழ்வார்களுக்கும் சடாரி மரியாதை செய்யப்பட்டது. அதன் பின் சொர்க்கவாசல் வழியாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பெருமாளை வழிபட்டனர். தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில், பல்வேறு சமூகத்தினர் பந்தல் அமைத்திருந்தனர். அந்த பந்தலில் சுவாமியை நிறுத்தி அந்தந்த சமூகத்தினர் சிறப்பு பூஜை செய்து, சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பேபி ஷாலினி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் ஆகியோர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !