ஆங்கில புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மூன்று டன் பூக்கள் கொண்டு சிறப்பு தரிசனம்
நாமக்கல்: ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மூன்று டன் பல்வேறு வகையான பூக்களைக் கொண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்லில் உலக புகழ்பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி நாமகிரி தாயாரையும் நரசிம்ம பெருமாளையும் இரு கைகளையும் கைகூப்பி வணங்கி நின்ற கோளத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இன்று 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது தொடர்ந்து பல்வேறு வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது இதனை அடுத்து காலை 6.30 மணி அளவில் ரோஜா சம்பங்கி சாமந்தி துளசி முல்லை மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான 3 டன் அளவிலான பூக்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த சிறப்பு அபிஷேகத்தை காண நாமக்கல் மட்டுமே இன்றி அதனை சுற்றியுள்ள கரூர் ஈரோடு சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்தனர். இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.