சோழர் கால கல்வெட்டு விழுப்புரத்தில் கண்டெடுப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சோழர் கால கல்வெட்டு மற்றும் விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, சோழர் காலத்து கல்வெட்டு மற்றும் விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது:
கல்பட்டு சனீஸ்வரர் கோவில் வளாகத்தில் கொட்டிக்கிடந்த கருங்கற்களை ஆய்வு செய்தபோது, 2 துண்டு கற்களில் பழைமையான எழுத்துகள் கண்டறியப்பட்டன.
ஒரு கல்லில் இது பந்மா ஹேஸ்வரருக்கு ரக்ஷை என குறிப்பிடப்பட்டுள்ள து. வழக்கமாக கல்வெட்டுகளின் இறுதியில் குறிப்பிடப்படும் வாசகம் அது. சிவாலயத்திற்கு உரியது. முற்கால சோழருக்கே உரிய வகையில், மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளன. இதன் காலம் கி.பி.10ம் நுாற்றாண்டாகும்.
மற்றொரு துண்டு கல்வெட்டில் ‘ராஜகேசரி வம்மக்கு (வர்மருக்கு) ஒடு நீக்கி விடுத்தார் இறை வீழ்த்’ எனு ம் முற்று பெறாத வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனை வாசித்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விஜயவேணுகோபால், இது பிற்கால சோழர் காலத்தை சேர்ந்த (கி.பி.11–12 ஆம் நூற்றாண்டு) என தெரிவித்துள்ளார்.
வரி நீக்கம் செய்ததை இக்கல்வெட்டு சொல்கிறது. இதில் குறிப்பிடப்படும் ராஜகேசரிவர்மர் யார் என்பது தெளிவாகவில்லை. இதே போல், கல்பட்டு மாரியம்மன் கோவில் திடலில், பலகை கல்லில் ஆன விநாயகர் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.
மண்ணில் புதைந்திருந்த இந்த சிற்பத்தை கிராமத்தினர் சமீபத்தில் வெளியே எடுத்துள்ளனர். நான்கு கரங்களுடன் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் விநாயகர் காட்சியளிக்கிறார். அவரது பின் வலது கரம் நெற்கதிரையும் இடது கரம் அரிவாளையும் ஏந்தியுள்ளன. கலைநயத்துடன் காணப்படும் விநாயகர் சிற்பத்தின் காலம் கி.பி.10ம் நூற்றாண்டாகும்.
கதிர் அரிவாளுடன் காணப்படுவதால், இந்த விநாயகர் வேளாண்மையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார். இதே மாதிரியான யானை முகன் சிற்பங்கள் இலங்கையில், பவுத்தர்களால் வணங்கப்படுவதாக ஆய்வாளர் விஜய வேணுகோபால் தெரிவித்தார். தற்போது கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள் மூலம் கல்பட்டு கிராமத்தின் 1000 ஆண்டுகள் பழமை தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.