துலாம் : தை ராசி பலன்
துலாம்: சித்திரை 3,4 ம் பாதம்:
புதிய முயற்சிகளில் உறுதியாக இருந்து முன்னேற்றம் அடையும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியும், சப்தமாதிபதியுமான தைரிய வீரிய பராக்கிரமக் காரகன் செவ்வாய் கேந்திர ஸ்தானமான 4ல் உச்சமாக சஞ்சரிப்பதால் உங்களிடம் இருந்த சோம்பல், நலிவு எல்லாம் விலகி சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். அரைகுறையாக விட்டு வைத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்கள். பயந்து பயந்து செயல்பட்ட நிலை இனி இருக்காது. உங்களைக் குறை கூறியவர்களும் பாராட்டும் நிலை உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவுடன் புதிய பொறுப்பும் கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருக்கும் குருவால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்த்த பணம் வரும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கு, பிரச்னைகள் முடிவிற்கு வரும். செய்து வரும் தொழிலை விரிவு செய்யக் கூடிய நிலை சிலருக்கு ஏற்படும். சொந்த இடம் இல்லை வீடு இல்லை என்ற மனக்குறை விலகும். சொந்த வீட்டில் குடியேறும் நிலை உருவாகும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.
சந்திராஷ்டமம்: ஜன.27, 28.
அதிர்ஷ்ட நாள்: ஜன.15, 18, 24, பிப். 6, 9.
பரிகாரம் : ராஜ ராஜேஸ்வரியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
சுவாதி
பெரிய அளவில் திட்டங்கள் தீட்டி அதைச் செயல்படுத்துவதில் வல்லவரான உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கர்மக்காரகன் சனியுடன், ராகு கூட்டணி அமைத்திருப்பதால் குடும்பத்தில் ஏதேனும் நெருக்கடி, பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். உங்கள் வாழ்வுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். வரவிற்கேற்ப செலவு செய்ய பழகிக் கொள்வீர்கள். வேலைப் பார்க்கும் இடத்தில் சிறு பிரச்னைகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு எதிராக மாறக் கூடும், அவர்கள் செய்த தவறுக்கு உங்கள் பழி சுமத்துவர் என்றாலும், மேலதிகாரியின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு இந்த மாதத்தில் கிடைக்கும். ஜன.29 வரை உங்கள் பாக்கியாதிபதி புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனத்தால் சாதனை புரிவீர்கள். கொடுக்கல் வாங்கல் சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய இடம், வீடு வாங்கும் நிலை உருவாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். கலைஞர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வங்கியில் கேட்ட பணம் கிடைக்கும். புதிய வாகனம், ஆடை, ஆபரணம் சேரும். சுகஸ்தானத்தில் லாபாதிபதி சூரியனும், செவ்வாய் உச்சமாகவும் சஞ்சரிப்பதால் வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வு உறக்கம் குறைவதால் உடல் நிலையில் சங்கடம் வந்து போகும். தாயாரின் உடல் நிலையில் அக்கறை தேவை. மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வியாபாரிகளுக்கு வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வயதானவர்கள் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜன. 28, 29
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 22, 24, 31. பிப். 4, 6
பரிகாரம் : துர்கையை வழிபட்டால் முயற்சி வெற்றி பெறும்.
விசாகம் 1,2,3 ம் பாதம்
அதிர்ஷ்டம், உலக ஞானத்தையும் ஒன்றாக கொண்டிருக்கும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஞானக் காரகன் குரு பாக்கிய ஸ்தானத்தில் வக்ரமாகி இருப்பதால் பணவரவில் எதிர்பாராத தடை ஏற்படும். அவசரம் அவசரமாக சில வேலைகளில் ஈடுபட்டு நெருக்கடிக்கு ஆளாக நேரும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். விரய செலவு குறையும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். ஜன.29 வரை எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிப்.7 முதல் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக சந்திப்பதால் ஆடை, ஆபரணம் சேரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் நெருக்கடி விலகும். அரசு பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். ஆனால் உழைப்பு அதிகரிக்கும். அவசர வேலைகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதனால் உடல் நிலையில் பாதிப்புகள் வந்து போகும். நேரத்திற்கு துாங்குவது, சாப்பிடுவது என சரியாக இருந்தால் உடல் நிலை சீராகும். புதியவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவைக்கேற்ற வருமானம் வருவதால் பணநெருக்கடி இருக்காது. மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன. 29.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 21, 24, 30. பிப். 3, 6, 12.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட வாழ்வு வளம் பெறும். நன்மை நடக்கும்.