உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று மாலை நடக்கிறது

கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று மாலை நடக்கிறது

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தை மாத பிறப்பையொட்டி சுவாமி சுந்தரேஸ்வரரின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை இன்று (ஜன.,15) மாலை நடக்கிறது.


மதுரையில் சுவாமி சுந்தரேஸ்வரர் பல்வேறு திருவிளையாடல்களை நடத்தி காட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. அதில் ஒன்றுதான் கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை. ஒரு சமயம் சுவாமி, சித்தர் வேடத்தில் தோன்றி பல சித்து வேலைகளை செய்தார். இதனால் மதுரை மக்கள் தன்னிலை மறந்து கூட்டம் கூட்டமாக அவரிடமே இருந்தனர்.


இதை அறிந்த மன்னர் அபிஷேகப்பாண்டியன், அரண்மனைக்கு அவரை அழைத்து வர ஏற்பாடு செய்தார். இதை அறிந்த சித்தர், மீனாட்சி கோயிலில் தியானத்தில் ஈடுபட்டார். (இந்த இடம் சுவாமி சன்னதி சுற்றுப்பாதையில் துர்கை சன்னதி அருகே ‘எல்லாம் வல்ல சித்தர்’ சன்னதியாக உள்ளது).


தியானத்தில் இருக்கும் சித்தரை காண கோயிலுக்கு மன்னர் வந்தார். பாதுகாவலர்கள் சித்தரின் தியானத்தை கலைக்க முற்பட்டு கையை ஓங்கியபோது அவை அப்படியே நின்றன. கண் விழித்த சித்தர், நான்தான் ஆதியும் அந்தமும். இங்குள்ள மக்களுக்கு சித்து விளையாட்டு காட்டி அவர்களுக்கு தேவையான வரத்தை அளித்து வருகிறேன். என் பெயர் எல்லாம் வல்ல சித்தர் என்றார்.


அவர் மேல் நம்பிக்கையில்லாத மன்னர் எல்லாம் வல்ல சித்தர்’ என்றால், இந்த கரும்பை இங்குள்ள கல் யானையை சாப்பிட செய்யுங்கள் என்றார். கல் யானையிடம் கரும்பை சித்தர் நீட்டினார். யானை உயிர்ப்பெற்று கரும்பை வாங்கி சாப்பிட்டது. இதைதொடர்ந்து அவரிடம் தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என மன்னர் கேட்க, அதன்படியே சித்தர் அருளால் ஆண் குழந்தை பிறந்தது.


இந்த லீலையை நினைவூட்டும் விதமாக இன்று மாலை 6:00 மணிக்கு சித்தர் சன்னதி அருகே கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !