உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் பொங்கல் விழா, வைகை ஆற்றில் இருந்து பூ கரகம் எடுத்து வழிபாடு

மானாமதுரையில் பொங்கல் விழா, வைகை ஆற்றில் இருந்து பூ கரகம் எடுத்து வழிபாடு

மானாமதுரை; மானாமதுரை சிப்காட் அருகே கெங்கையம்மன் குடியிருப்பில் உள்ள கெங்கை மற்றும் காளி அம்மன் கோயில் பொங்கல் விழாவிற்காக வைகை ஆற்றில் இருந்து ஏராளமானோர் பூக்கரகங்களை சுமந்து சென்று அம்மனை வழிபட்டனர்.


மானாமதுரை சிப்காட் அருகே உள்ள கெங்கை அம்மன் குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் மற்றும் கலைக்கூத்தாடிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வருகிற நிலையில் குடியிருப்பில் உள்ள கெங்கை மற்றும் காளி அம்மன் கோயிலில் வருடம் தோறும் பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர். இந்த வருடத்திற்கான விழாவிற்காக கடந்த வாரம் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற பொங்கல் விழாவிற்காக நூற்றுக்கணக்கானோர் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே வைகை ஆற்றுக்குள் பூக்கரகம் மற்றும் தீச்சட்டிகள் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியே கோயிலை வந்தடைந்தனர் இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடந்தது. கோயில் முன்பாக கலைக்கூத்தாடிகள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் வைத்து அம்மனை வேண்டினர்.விழாவில் தமிழகம் முழுவதிலும் உள்ள சர்க்கஸ் கலைஞர்கள் மற்றும் கலை கூத்தாடிகள் வருகை தந்து திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கெங்கையம்மன் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !