தைப்பூசத்தன்று பக்தர்கள், பழநி மலைக்கோயில் செல்லும் பாதை மாற்றம்
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழநி தைப்பூசத்திற்கு பாதுயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பிப்., 1 தைப்பூசத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பழநி முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய ஏற்ற வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் வெளியூர் பஸ்கள் நிறுத்த இட வசதி செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள் நிறுத்த கட்டணமில்லாத 13 பார்க்கிங் வசதிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் உள்ளூர் டவுன் பஸ்கள் வந்து செல்ல தற்போது பயன்படுத்தி வரும் பஸ் ஸ்டாண்ட் செயல்பட உள்ளது. மேலும் பழநி நகருக்குள் வந்து செல்லும் வாகனங்களுக்கு பாஸ் வசதி இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. அதற்கான பாதை மாற்றம் செய்யப்படவுள்ளது.
மேலும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கடந்த ஆண்டு, தேவர் சிலை, திருஆவினன்குடி, சன்னதி ரோடு, பாத விநாயகர் கோயில் குடமுழுக்கு மண்டபம் என மலைக் கோயிலுக்கு செல்லும் பாதை இருந்தது. இதில் கடந்த ஆண்டு சன்னதி வீதியில் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி சிலர் மயக்கமடைந்தனர். இந்த ஆண்டு பக்தர்களின் வரிசை கிரிவீதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரோப் கார் நிலைய அருகில் இருந்து துவங்கும் பக்தர் மலைக்கோயில் செல்லும் வரிசை வரிசை துவங்கி குடமுழுக்கு மண்டபம் வரை கிழக்கு கிரி வீதி, வடக்கு கிரி வீதியில் அமைக்கப்பட உள்ளது. பக்தர்கள் அய்யம்புள்ளி ரோடு, சன்னதி வீதி, ஆண்டவர் பூங்கா ரோடு, கொடைக்கானல் ரோடு இணைப்பு சாலை, ஆகியவற்றின் மூலம் கிரிவீதியை அடைந்து வரிசையில் இணைந்து கொள்ளலாம். இதனால் சன்னதி வீதியில் பக்தர்கள் தேக்கம் அடைவது ஏற்படாத நிலை ஏற்படும். அதேபோல் பக்தர்கள் மலைக்கோயில் இருந்து கீழே இறங்கியவுடன் பாதவிநாயகர் கோயிலில் இருந்து அய்யம்புள்ளி ரோடு, சன்னதி ரோடு, ஆகியவற்றில் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு செல்லலாம். கிரிவீதியில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட,மருத்துவ அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கிரிவீதியில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.