திருப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 15 வேலம்பாளையம் அடுத்த காவிலிபாளையத்தில், ஸ்ரீசெல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் ஆகிய கோவில்களில், மஹா கும்பாபிஷேக விழா, 18ம் தேதி துவங்கியது. விழாவில், நேற்று முன்தினம், மாலை முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, யாகசாலை பிரவேசம் செய்து, முதல் கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று காலை, 2ம் கால யாக பூஜையும் தொடர்ந்து நேற்று மாலை, 3ம் கால யாக பூஜைகளும் நடந்தது. இரவு, செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் மூலவர் ஸ்தாபிதம், எந்திர ஸ்தாபிதம் மற்றும் எண் வகை மருந்து சாத்தும் நிகழ்வும் நடைபெற்றது. இன்று (21ம் தேதி) அதிகாலை, 4:30 மணிக்கு, 4ம் கால யாகபூஜையைத் தொடர்ந்து திருக்குடம் புறப்பாடும், காலை, 6:30 மணிக்கு செல்வ விநாயகர், 7:25 மணிக்கு ஸ்ரீமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகமும் நடக்கிறது. விழாவில், கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள், திருப்புக்கொளியூர் ஆதினம் காமாட்சிதாச சுவாமிகள் பங்கேற்கின்றனர்.