கோடி, கோடியாக வருமானம் வரும் தாயமங்கலம் கோயிலில் அடிப்படை வசதி இல்லை; பக்தர்கள் அவதி
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு கோடி, கோடியாய் வருமானம் கொட்டுகிற நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பக்தர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் தகர கொட்டகையிலும், தார்ப்பாய் நிழலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.இங்கு பங்குனி மாதம் தொடர்ந்து 10நாட்கள் நடைபெறும் பொங்கல் விழாவின்போது தமிழகம் மட்டுமில்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முடி காணிக்கை, தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, உருண்டு கொடுத்தல், கரும்பாலை தொட்டில் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி செல்கின்றனர். பங்குனி மாதம் முழுவதும் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருக்கும். இதேபோன்று ஆடிமாதத்திலும் மற்ற மாதங்களிலிலும் செவ்வாய்,வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் கோயிலில் இருந்து உண்டியல்கள், அர்ச்சனை கட்டணம், முடி காணிக்கை, தானியங்கள் காணிக்கை, ஆடு,கோழி பலியிடுதல் உள்ளிட்ட பல்வேறு இனங்கள் மூலமாக வருடம் தோறும் ஹிந்து சமய அறநிலையத்துறை கோடி, கோடியாக வருமானம் ஈட்டி வருகிறது.ஆனால் இக்கோயிலில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பக்தர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
சிவகங்கையை சேர்ந்த துஷ்யந்தன் கூறியதாவது: கோயிலின் உள்பிரகாரத்தில் பக்தர்கள் வரிசையில் நிற்கும் பகுதியில் கல் மண்டபங்கள் இல்லாத காரணத்தினால் பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். பங்குனித் திருவிழா நாட்களின் போது மட்டும் ஆங்காங்கே தகரக் கொட்டைகளையும், தார்ப்பாய்களையும் விரித்து வருகின்றனர்.மேலும் திருவிழா காலங்களில் கோயில் வளாக பகுதியில் வைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏலம் விடும் போது ஏல நிர்ணயத் தொகை மிக அதிகளவாக இருப்பதினால் ஏலதாரர்கள் ஏலம் எடுத்த பிறகு அதனை வசூல் செய்வதற்காக வியாபாரிகளிடம் கூடுதலாக கட்டணம் வாங்குவதால் வியாபாரிகள் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதால் பக்தர்கள் தான் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டு வருகிறோம். மேலும் வியாபாரிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூல் செய்கிற நிலையில் வியாபாரிகளுக்கு போதுமான இட வசதி, மின் இணைப்பு வசதி மற்றும் கட்டட வசதிகளும் செய்து கொடுப்பது கிடையாது.இதனால் வியாபாரிகள் வெட்ட வெளியில் கடைகளை வைத்து வியாபாரம் செய்ய வேண்டிய அவல நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
மானாமதுரை சங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் கூறியதாவது,: இக்கோயிலுக்கு பங்குனி மாதம் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்ற நிலையில் அவர்கள் தங்குவதற்காக இங்கு எவ்வித வசதியும் கிடையாது. மேலும் கழிப்பறை குளியலறை போன்ற வசதிகளும் இல்லாததால் பக்தர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகிறோம் இந்து சமய அறநிலையத்துறை இக்கோயிலில் இருந்து வருமானத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கோயிலுக்காக எதுவும் செலவு செய்வது கிடையாது.கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கூட இக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற போது ஹிந்து சமய அறநிலையத்துறை எந்தவித நிதி உதவியும் வழங்காத காரணத்தினால் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் சார்பில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆகவே வருகிற பங்குனி மாதம் வரவுள்ள பொங்கல் திருவிழாவிற்காவது ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இக்கோயிலில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.