பாம்புகளின் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கவுரிபிதனுார் விதுராஷ்வதா கோவில்
சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகா ஹலகனஹள்ளி கிராமத்தில், பிரசித்தி பெற்ற விதுராஷ்வதா கோவில் உள்ளது. இக்கோவில் பாம்புகளின் கடவுளான நாகேந்திரா சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. கடந்த 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், பழமை மாறாமல் இன்னும் அப்படியே உள்ளது. பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைந்ததும், பாம்பு உருவங்களை கொண்ட ஏராளமான சிலைகளை காணலாம். ஒவ்வொரு சிலையும் வெவ்வேறு வடிவங்களை கொண்டது.
அனைத்து வகையான நாகதோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, நாகர் சிலைகளை தரிசித்தால், தோஷங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கோவில் கருவறையிலும் நாக சிலையும், சிவலிங்கமும் உள்ளது. இந்த கோவிலுக்கும், பல புராண கதைகளுக்கும் இடையில் நேரடி தொடர்பு இருக்கிறது. கோவிலில் நுழைந்ததும் முதலில் நாக சிலைகளை வழிபட்டு, பூக்கள், துாப குச்சிகள், பழங்களை காணிக்கையாக செலுத்தலாம். பாலையும் காணிக்கையாக கொடுக்கலாம்.
கோவிலில் நடக்கும் ஆரத்தியில் பங்கேற்பது பக்தர்களுக்கு மிகவும் நல்லது. கோவிலின் கட்டடக் கலை மிகவும் சிக்கலானது. ஆனாலும், அழகிய வேலைப்பாடுகளை உள்ளடக்கியது. ஆண்டிற்கு ஒரு முறை இங்கு நடக்கும் விதுராஷ்வதா திருவிழாவும், ரத உத்சவமும் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலின் அருகே உத்தர பினாகினி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் குளித்துவிட்டு, நாக சிலைகளை தரிசித்தால் நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது. தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.
எப்படி செல்வது:
பெங்களூரில் இருந்து 92 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து கவுரிபிதனுாருக்கு அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆந்திராவின் ஹிந்துபூர் செல்லும் பஸ்சில் சென்றால், ஹலகனஹள்ளி கிராமத்தில் இறங்கி கொள்ளலாம். பெங்களூரில் இருந்து கவுரிபிதனுாருக்கு மெமு ரயில் சேவையும் உள்ளது.