மாசி அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
இன்று மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டிய புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்தத்தில் சிவசிவ என கோஷமிட்டபடி ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். இதனைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் புனித நீராடி விட்டு கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜையில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் 1:30 மணிக்கு கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்ததும், அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.