பள்ளி வாசல்களில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்வு
மேட்டுப்பாளையம்; ரம்ஜான் மாதம் துவங்கியதை அடுத்து, இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து, ஐந்து நேர தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தை இறையச்சம் நிறைந்த புனித மாதமாக கருதுகின்றனர். நேற்று முன்தினம் இரவு பிறை பார்த்தவுடன், நேற்று காலையில் இருந்து, 30 நாள் நோன்பை துவக்கினர். அதிகாலை, 3:00 மணிக்கு எழுந்து சமையல் செய்து, ஐந்து மணிக்குள் சாப்பிட்ட பின், முதல் தொழுகையை நடத்தினர். அதன் பிறகு அடுத்தடுத்து மதியம், மாலை, சூரியன் மறையும் நேரம் என, தொழுகை செய்தனர். மாலை,6:36 மணிக்கு நோன்பு திறந்தனர். காட்டூர் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலில், நோன்பு திறக்கும் நிகழ்வு நடந்தது. முதல் நாள் நோன்பு திறப்பு நிகழ்வில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில், நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக பள்ளிவாசல் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.