உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு நளன் குளத்தில் ஆரத்தி நிகழ்ச்சி கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு

திருநள்ளாறு நளன் குளத்தில் ஆரத்தி நிகழ்ச்சி கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு

காரைக்கால்: காரைக்கால், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா பூர்வாங்க பூஜையை முன்னிட்டு நளன் தீர்த்த குளத்தில் நடந்த ஆரத்தி நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்றார்.


காரைக்கால், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அனுக்கிரகமூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். இது சனி பரிகார தலமாக உள்ளது.


இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் மார்ச் 6ம் தேதி நடக்கிறது. அன்று, சனி பகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு காலை 8:24 மணிக்கு பிரவேசிக்கிறார்.


சனிப்பெயர்ச்சி விழா பூர்வாங்க பூஜையை முன்னிட்டு நளன் தீர்த்த குளத்தில் ஆரத்தி விழா நேற்று நடந்தது. திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தலைமையில் பூர்வாங்க பூஜை, சொர்ண கணபதி ஹோமத்துடன் துவங்கியது.


மாலை நடந்த ஆரத்தி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்றார். தொடர்ந்து சிவன் மற்றும் சனி பகவானை கவர்னர் தரிசனம் செய்தார்.


பின், நளன் குளத்தில் புனித நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ஏழு ஆரத்தி மகா தீபாரதனை நடந்தது. முன்னதாக யானை, குதிரை, கழுதை, ஒட்டகம், ஆட்டுக்கிடா, சேவல் உள்ளிட்ட அஷ்ட பிராணிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.


நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், ராஜசேகரன் எம்.எல்.ஏ., கலெக்டர் இஷிதா ரெட்டி, கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !