திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாசி கிருத்திகை விழா கோலாகலம்
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவிலாக, திருப்போரூர் கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் மாசி கிருத்திகை விழா, விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு மாசி கிருத்திகை விழா, நேற்று நடந்தது.
அதிகாலை 3:00 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் மொட்டை அடித்து, சரவண பொய்கை குளத்தில் நீராடி, நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர்.
இதையொட்டி மாடவீதி, ஓ.எம்.ஆர்., சாலைகளில் உள்ள திருமண மண்டபங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
காவடி மண்டபத்திலிருந்து பலவிதமான காவடிகள் புறப்பட்டு, மாடவீதிகளில் சென்றன.
நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் வழிபட்டனர்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
பிரம்மோத்சவம் மூன்றாம் நாள் விழாவில் நேற்று காலை, கந்த பெருமான் புருஷாமிருகம் வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
திருப்போரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.