வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலம்
ADDED :220 days ago
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா அருகே உள்ள செராடு வனதுர்க்கை அம்மன் கோவிலில், ஆண்டு தோறும், மாசி மாதம் உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவ விழா கடந்த 20ம் தேதி தொடங்கியது.
உற்சவ நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு செண்டை மேளம் முழங்க, யானை அணிவகுப்புடன் காழ்ச்ச சீவேலி நடந்தது. மதியம், 12:00 மணிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில், செண்டை மேளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, யானை மீது அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு காழ்ச்ச சீவேலியோடு உற்சவம் நிறைவு பெற்றது.