திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் (புதன் ஸ்தலம்) இந்திரப் பெரு விழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு இணையான தலங்களில் முதன்மையான இக்கோவிலில் சிவமூர்த்தி, அம்பாள், தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது.
பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இக்கோவில் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இந்திர பெருவிழா 13 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இந்திர பெருவிழா நேத்து 28ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் முன்பு உள்ள கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.
தொடர்ந்து இயந்திரப் பெருவிழா கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய திருவிழாக்களாக வரும் 4ஆம் தேதி அகோர மூர்த்தி பூஜையும், மாலை சகோபரம் எனப்படும் தெருவடைச்சான் வீதி உலாவும், 6 ஆம் தேதி திருக்கல்யாணம், 8ஆம் தேதி திருத்தேர், 11ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.