கும்பகோணம் மாசிமக வைபோகம்: மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரியில் புனித நீராடிய பக்தர்கள்
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்,மாசிமக விழாவை முன்னிட்டு, கடந்த பிப்.21ம் தேதி சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், முக்கிய நிகழ்வான ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடிஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 11 சிவன் கோவில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகளுடன், மகாமக நான்கு குளக்கரைக்கு வந்தடைந்தனர். கம்ட விஸ்வநாதர் கோவிலில் பாலாலயம் செய்துள்ளதால், அக்கோவில் சுவாமி மகாமக குளத்திற்கு வரவில்லை.
பிறகு, மகாமக குளத்தில் அஸ்திர தேவருக்கு பல்வேறு வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர், சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மகா மககுளக்கரை மற்றும் நீர் நிலைகளில் ஏராளமானோர், மறைந்த தங்களது முதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
தேராட்டம்: கடந்த பிப்.22-ம் தேதி கொடியேற்றமும், 23-ம் தேதி முதல் மார்ச்1-ம் தேதி வரை பெருமாள் -தாயார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று சுதர்சனவல்லி,விஜயவல்லி தாயார்களுடன் சக்கரபாணி சுவாமி, பாமா, ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி, அம்புஜவல்லி தாயார் சமேத ஆதிவராகப்பெருமாள் ஆகிய சுவாமிகள் தேரில் எழுந்தருளிய நிலையில், ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தெப்ப உற்சவம்: இதை போல, கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலில், பெருமாள் உபயநாச்சியாருடன் யாத்ரா தானம் கண்டருளி வீதி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந் கோவில் பின்புறம் உள்ள ஹேமபுஷ்கரணி என்கின்ற பொற்றாமரை குளத்தில் வடிவமைக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் உபயநாச்சியாருடன் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடந்தது.