வீரபாண்டியில் முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் கால கல்வெட்டு
போடி; தேனி அருகே வீரபாண்டியில் 12, 13ம் நூற்றாண்டு முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
போடி சி.பி ஏ., கல்லூரி முதல்வர் சிவக்குமார் வழிகாட்டுதலின் படி, பேராசிரியர் மாணிக்கராஜ் தொல்லியல் கள ஆய்வு செய்து வருகிறார். மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் தகவலின் படி, ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பிரகாசம், மாணவர் கோகுல கிருஷ்ணன் வீரபாண்டி அருகே கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 12, 13ம் நூற்றாண்டு மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டு கண்டறிந்து உள்ளனர்.
பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது: தேனி மாவட்டம் சங்ககாலத்தில் இருந்து பிற்காலம் வரை அழநாடு என அழைக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் புல்லூர், புல்லியநல்லூர் என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட வீரபாண்டி ஓட்டணைக்கு அருகே 18ம் படி கருப்பசாமி கோயில் வாசல் முன்பு 3 அடி நீளம் உள்ள பலகை கல்லில் ‘‘ச்சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டு வழங்கியருளிய னாட்டு பிரமதேசம் ஆழ்வானங்கைச் சதுர்பொதி மங்கலத்து சி தான் திருவரங்கப் பெருமாளான தென்னவன் தமிழ் தரையன் " என மூன்று வரிகளில் தொடர் வாக்கியங்கள் இன்றி துண்டு கல்வெட்டாக வெட்டப்பட்டு இருக்கிறது.இக்கல்வெட்டில் கோணாடு கொண்டு வழங்கியருளிய என்பது பிற்கால பாண்டிய மன்னனான முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் சோழர்களை வென்று சோழ நாட்டை கைப்பற்றி மீண்டும் சோழர்களுக்கே வழங்கியதை குறிக்கும். இதன் அடிப்படையில் இக்கல்வெட்டு முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தில் வெட்டப்பட்டது என அறியப்படுகிறது. மேலும் ஆழ்வான் நங்கைச் சதுர்ப்பொதி மங்கலம் என்பது இன்றைய உப்பார்பட்டி ஊரைக் குறிக்கும் பண்டைய பெயராகும். இந்த ஊரைச் சேர்ந்த தென்னவன் தமிழ் தரையன் என்ற அதிகாரி கோயிலுக்கு ஏதோ ஒரு கொடை கொடுத்து உள்ளதை சொல்லும் செய்தியை கல்வெட்டில் வெட்டப்பட்டு இருக்க வேண்டும். தொடர் எழுத்துக்கள் வெட்டப்பட்ட கல் கிடைக் காததால் முழுவதும் அறிய முடிய வில்லை.
இக்கல்வெட்டு வீரபாண்டி கண்ணீஸ் வரமுடையார் கோயில் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய பலகை கல்லாக இருக்கலாம். அல்லது வீரபாண்டி – தேனி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் உள்ள சென்ராய பெருமாள் கோயிலில் பழைய கட்டடப் பகுதியில் எடுக்கப்பட்ட கல்லாக இருக்கலாம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டை தொல்லியல் துறையினர் மீட்டு ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியத்தில் பாதுகாக்க வேண்டும் என்றார்.