உற்சவர் சிலை கலசங்களுடன் பக்தர்கள் ஊர்வலம்
மேச்சேரி: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் உற்சவர் சிலை, கோபுரகலசங்களை, பக்தர்கள், கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும், 23ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதிதாக வடிவமைக்கப்பட்ட, 125 கிலோ எடையுள்ள பஞ்சலோக பத்ரகாளியம்மன் உற்சவர் சிலை, தங்க விமான கலசம், கோபுர கலசங்கள், மேச்சேரிக்கு கொண்டு வரப்பட்டது. உற்சவர் சிலை, கோபுர கலசங்களை, பக்தர்கள், மேச்சேரி எல்லையில் வரவேற்று, அங்கிருந்து பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி நெடுஞ்சாலை வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். நிகழ்ச்சியில், இறையருள் நற்பணி மன்ற தலைவர் அம்மாசி, செயலாளர் ராமசாமி, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மன்ற துணை தலைவர்கள் கலையரசன், ராஜா, செல்வராஜ், மேட்டூர் எம்.எல்.ஏ., பார்த்திபன், மாஜி எம்.எல்.ஏ.,க்கள் நாராயணன், பழனிச்சாமி, பரம்பரை கட்டளைத்தாரர்கள் சாம்பசிவம், பொன்.பச்சியப்பன், துரை பச்சியப்பன், மேச்சேரி பேரூராட்சி தலைவர் குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.