உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவிலில் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்

திருத்தணி: முருகன் கோவிலில் நேற்று கொளுத்தும் வெயிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், ஒரு மணி நேரத்திற்கு மேல் பொது வழியில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிப்பர். இந்நிலையில் நேற்று, வார விடுமுறை நாள் என்பதால் வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் மூலவரை தரிசிக்க பொது வழியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மேலும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 40 நிமிடத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். முன்னதாக, அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி – தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மலைப்பாதையில் ஆட்டோ, வேன், பேருந்து போன்ற வாகனங்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதித்தது. இதுதவிர கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதை நுழைவு வாயிலில் இருந்து மலைக்கோவில் படா செட்டிக்குளம் வரை, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருத்தணி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !