ஆற்பாக்கம் திருவாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் விமரிசை
ஆற்பாக்கம்: ஆற்பாக்கம் திருநல்லழகி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோத்சவத்தின ஏழாம் நாளான நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலை, ஆற்பாக்கத்தில் திருநல்லழகி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோத்சவம் நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான பங்குனி பிரம்மோத்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் திருவாலீஸ்வரர் வீதியுலா வருகிறார். அதன்படி ஆறாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் காலை ஜேஷ்டாதேவிக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. இரவு யானை வாகன உத்சவம் நடந்தது. இதில், ஏழாம் நாள் உத்சவமான நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில், திருநல்லழகி அம்பாளுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய திருவாலீஸ்வரர் முக்கிய வீதி வழியாக பவனி வந்தார். ஏப்., 3ம் தேதி மாலை உற்சவ சாந்தி அபிஷேகத்துடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.