திருப்பரங்குன்றத்தில் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி உலா: தீப தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பக்தர்கள் கிரிவலம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க குதிரை வாகனத்தில் சுவாமி, தெய்வானையுடன் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், தமிழகத்தில் ஆன்மிகத்தை போற்றக்கூடியவர்களின் ஆட்சி அமைய வேண்டும் என வலியுறுத்தியும் முருக பக்தர்கள் பேரவையினர் கிரிவலம் சென்றனர். நேற்று மாலை மயில் மண்டபத்திலிருந்து மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநிலச் செயலாளர் சேவுகன், மதுரை கோட்ட செயலாளர் அரசு பாண்டி, மாவட்ட செயலாளர்கள் தங்கம் வெங்கடேஷ், மாணிக்க மூர்த்தி, பிரசாந்த், பாலமுருகன், சண்முகவேல், கண்ணன், அன்னையர் முன்னணி மாவட்ட தலைவர் பாலாசுப்பிரமணியன், வியாபாரிகள் நலச்சங்க மாவட்ட செயலாளர் சசிகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், நகர் தலைவர் சூர்யா, பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட 500க்கும் மேற்பட்டோர் கையில் வேலுடன் ஊர்வலமாகச் சென்று கோயில் முன்பு தீபாராதனை காண்பித்து கிரிவலம் சென்றனர்.
ராஜேஷ் கூறுகையில், மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டுமென முருக பக்தர்கள் பேரவை சார்பில் இரண்டு மாதங்களாக கிரிவலம் நடத்துகின்றோம். நீதிமன்றம் மூன்று முறை தீர்ப்பு வழங்கியும் அதை தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், போலீஸ், கோயில் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக தீபம் ஏற்றுவதற்கு தடையும் விதித்தனர். இதனால் முருக பக்தர்கள், ஹிந்துக்கள், ஆன்மிக அன்பர்கள் மனம் வேதனை அடைந்துள்ளோம். ஹிந்துக்கள், முருக பக்தர்களின் முதுகில் தமிழக அரசு நயவஞ்சகமாக குத்தி விட்டது. நீதிமன்ற தீர்ப்பை வரும் கார்த்திகை மாதம் நிறைவேற்ற வலியுறுத்தியும், வரும் காலத்தில் முருகப்பெருமானை மதிப்பவர்கள், ஹிந்துக்களை மதிப்பவர்கள், ஆன்மிகத்தை போற்றக்கூடியவர்களின் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கிரிவலம் நடைபெற்றது. கிரிவலம் தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். ஆன்மிகம் என்பது தமிழகத்தின் அடிப்படை. ஏப். 23 அன்று தமிழக மக்கள் ஆன்மிக ஆட்சி காண தீர்ப்பை வழங்குவார்கள். தீபம் ஏற்றுவதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கே முருக பக்தர்களும், ஹிந்துக்களும் ஆதரவு தெரிவிக்க உள்ளனர் என்றார்.