விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை தரிசித்தனர்.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா, இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி பொங்கல் நேற்று நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். நோய்களை தீர்க்க கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியும், பெண்கள் மாவிளக்கு, ஆயிரங்கண் விளக்கு வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 8:00 மணிக்கு அடுப்பு பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து தங்கக் குதிரை வாகனத்தில் அம்மன் நகர்வலம் வந்தார்.
இன்று கயிறு குத்து, அக்னிசட்டி எடுத்தல் நடக்கிறது. நாளை (ஏப்.7) தேரோட்டம், ஏப்.8ல் தேர்தடம் பார்த்தல், ஏப்.9ல் மஞ்சள் நீராட்டம் செய்யப்பட்டு கொடியிறக்கம் செய்யப்படவுள்ளது. ஏப்.12ல் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம் தலைவர் லெனின், நிர்வாக செயலாளர் நாராயணமூர்த்தி, உதவி தலைவர் கண்ணபிரான், உதவி செயலாளர் ரமேஷ், பொருளாளர் முத்து உள்பட நிர்வாக உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.