உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, சித்திரை பெருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் 6-ந்தேதி  நடைபெற்றது. 


இந்த நிலையில் சித்திரை பெருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று ( திங்கள்கிழமை ) காலை  நடைபெற்றது. முன்னதாக பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் கோவிலுக்குள் புறப்பாடாகி கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது, இதையடுத்து  பிரமாண்ட கொடிமரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி கோஷத்தின் நடுவே மங்கல வாத்தியம் முழங்க  கொடி ஏற்றப்பட்டது. 

இந்த விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


விழாவில் இன்று மாலை 6.30 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் படி சட்டத்தில் புறப்பாடு நடைபெறுகிறது . விழா நாட்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து விழா நாட்களில் நாள்தோறும் பல்லக்கிலும், சிம்மம், மேஷம், வெள்ளி மயில், சந்திர பிரபை, முத்துப்பல்லக்கு, பூதம், வெள்ளி யானை உள்பட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27-ந்தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் நடைபெறுகிறது. தேரானது நான்கு ராஜவீதிகளில் வலம் வர உள்ளது. மேலும் அன்றைய நாளில் அதிகாலை 5 மணிக்குள் முத்து மணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. விழாவில் 18-ம் நாளான 30-ந்தேதி தியாகராஜர் ருத்திரபாத தரிசனத்துடன் யதாஸ்தான பிரவேசம், தொடர்ந்து மதியம் நடராஜர் நான்கு ராஜவீதி புறப்பாடு சிவகங்கை குளத்தில் தீர்த்த வாரி நடைபெறுகிறது. மாலையில் கொடியிறக்கத்துடன் சித்திரை பெருவிழா  நிறைவு அடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !