திருநள்ளாறு கோவில் தங்க தேர் பணியை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை
காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் ரூ.4.50 கோடி மதிப்பில் தங்கத் தேர் செய்யும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால், திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இது நவக்கிரகங்களில் சனி பரிகார ஸ்தலமாக உள்ளது.
தினசரி பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் சமீபத்தில் சனிப் பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடந்தது.
இதனிடையே பக்தர்களின் வேண்டுதலை ஏற்று, நன்கோடை உதவியுடன் கோவில் நிர்வாகம், 4.50 கோடி ரூபாய் மதிப்பில் 8 கிலோ தங்கம் மூலம் தங்கத் தேர் செய்யும் பணி சில ஆண்டுகளுக்கு முன், துவங்கப்பட்டது.
முதல் கட்டமாக தங்கத் தேர் செய்யப்பட்டு, தேரின் முன் இரண்டு குதிரை வாகனம் சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் பல்வேறு காரணங்களால் தங்க தேர் செய்யும் பணியில் சில மாதங்களாக தொய்வு ஏற்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எனவே தங்க தேர் செய்யும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.