பந்தலூர் அம்மன் கோவில் திருவிழா பறவை காவடியில் பக்தர்கள் பரவசம்
பந்தலூர்: பந்தலூர் அருகே படைச்சேரி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பறவை காவடி ஊர்வலம் பக்தர்களை பரவசப்படுத்தியது.
பந்தலூர் அருகே படைச்சேரி அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் கோவில் 48 ம் ஆண்டு திருவிழா, கடந்த 22 ம் தேதி காலை வாஸ்து சாந்தி, முகூர்த்த கால் நடுதல் மற்றும் மக கணபதி ஹோமம், மகா சுதர்சன ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு பூஜைகள் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று பக்தர்களின் பால்குடம், காவடி ஆட்டம், பறவை காவடி மற்றும் அன்னக்காவடி ஊர்வலம் நடந்தது. இதில், பக்தி பரவசத்துடன் வந்த பறவை காவடி ஊர்வலம் பக்தர்களை பரவசப்படுத்தியது. மாலை தேர் பவனியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் மாவிளக்கு பூஜை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.