தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை பெருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரை பெருவிழா தீர்த்தவாரியுடன் இன்று நிறைவு பெற்றது.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு சித்திரை பெருவிழாவுக்கான பந்தகால் முகூர்த்தம் மார்ச் 6-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து ஏப்.13-ம் தேதி சித்திரை பெருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் காலை, மாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 27 ம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர். இதையடுத்து இன்று கோயிலிருந்து அஸ்திரதேவர் பல்லக்கில் புறப்பட்டு, அருகில் உள்ள சிவகங்கை குளத்துக்கு சென்றார். அங்கு அஸ்திரதேவருக்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.தஞ்சாவூர் பெரிய கோயிலில் 18 நாட்களாக நடைபெற்று வந்த சித்திரை பெருவிழா இன்று நிறைவு பெற்றது.