பரமக்குடி சுந்தரராஜ பெருமாளுக்கு கும்ப திருமஞ்சனம்: நாளை எதிர் சேவை
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் கும்ப திருமஞ்சனம் நடந்தது.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் நடக்கிறது. ஏப்., 26ல் துவங்கிய விழாவில் தினமும் யாகசாலை பூஜைகள் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, மூலவர் உற்சவர் மற்றும் கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பல ஆயிரம் பக்தர்கள் மாவிளக்கு வைத்து வழிபாடு செய்தனர். கோயில் மற்றும் வைகை ஆறு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று இரவு 12:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் அருள்பாலிக்கிறார்.
இன்று காலை 6:00 மணிக்கு நாட்டாமை தெரு சவுராஷ்டிர பிராமண மகாஜனங்கள் சார்பில் 93 வது ஆண்டு சந்தன குடம் எடுக்கும் விழா நடந்தது. தொடர்ந்து இளநீர் காவடி, பால் குடங்களை சுமந்து முக்கிய வீதிகளில் வலம் வந்து, பகல் 11:30 மணிக்கு கோயில் அடைந்தனர். பின்னர் கருப்பணசாமிக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் நடந்தது.