விருத்தாசலம் ஆதிசக்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆதிசக்தீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் வடம்பிடித்து தேரை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரி உடனுறை ஆதிசக்தீஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேரோட்ட விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, இன்று காலை 8:00 மணிக்குமேல், 9:30 மணிக்குள் தேரோட்டம் விமர்சையாக நடந்தது. ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் திரளாக வடம்பிடித்து, தேரோடும் வீதிகளில் இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இன்று மதியம் 12:00 மணிக்கு மேல், தீர்த்தகுளத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. நாளை தெப்பல் உற்சவத்துடன் சித்திரை விழா நிறைவு பெறுகிறது.