திருவண்ணாமலையில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில், 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேசமயம் கிரிவலம் முடித்த பக்தர்கள், ஊருக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லாமல் அவதிக்குள்ளாகினர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, மாதந்தோறும் பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீப தரிசன விழாவில், பல மாவட்டங்கள், பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்ரா பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு, 9:52 மணிக்கு தொடங்கி நேற்றிரவு, 11:02 மணிக்கு நிறைவு பெற்றது. இதனால் நேற்று முன்தினம் காலை முதலே, திருவண்ணாமலையில் கிரிவலம் வரவும், அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்யவும் பக்தர்கள் வரத்தொடங்கினர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பகலில் பக்தர்கள் தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தனர். நேற்று மாலை முதல் கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை உயர தொடங்கியது. இரவில் பல லட்சமாக உயர்ந்தது. பக்தர்களின் கூட்டத்தால் திருவண்ணாமலை நகரமே குலுங்கியது. லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கிரிவலம் சென்றதால், கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் தலைகளாகவே காட்சி தந்தது. ஏழு மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பஸ்சுக்கும் காத்திருப்பு: கிரிவலம் வர திருவண்ணாமலை நகருக்குள் வந்த வாகனங்கள், நகருக்குள் நுழையக்கூடிய, 9 சாலைகளில், 10 கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஊர்ந்து சென்றன. இந்த, 10 கி.மீ துாரத்தை கடந்து நகருக்குள் வர, வாகன ஓட்டிகளுக்கு, 4 மணி நேரமானது. மேலும், கிரிவலம் சென்ற பக்தர்கள் மீண்டும் ஊருக்கு செல்ல போதிய பஸ்களின்றி அவதிக்கு ஆளாகினர். பஸ்சுக்காக, 5 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து சொந்த ஊர்களுக்கு பஸ் ஏறி சென்றனர்.