இறைவழிபாடு செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்; போர்ச்சுக்கல் பக்தர்கள் நெகிழ்ச்சி
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த வர்த்தகர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், ஜப்பான் என, பல்வேறு நாடுகளுடன், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் செய்து வருகின்றன. வர்த்தக பேச்சுவார்த்தைக்காக, அவ்வப்போது, வெளிநாடு சென்று வருகின்றனர்; அதேபோல், வர்த்தகர்களும், திருப்பூர் வந்து, தொழிலாளர் நலன் மற்றும் உற்பத்தி படிநிலைகளை நேரில் பார்வையிடுகின்றனர்.
அவ்வகையில், குளிர்கால ஆர்டர் தொடர்பான வர்த்தக விசாரணைக்கு வந்த போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த வர்த்தகர்கள், நேற்று அவிநாசியில் உள்ள, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வழிபட்டனர். திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தும் ரமேஷ் என்பவருடன் சென்று, கோவிலில் வழிபட்டனர். சிவாச்சாரியார்கள், பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்து, பிரசாதம் வழங்கினர்.
போர்ச்சுக்கல் வர்த்தகர்கள் கூறுகையில், ‘நாங்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள்; இருப்பினும், ஹிந்து தெய்வங்களின் மீதும், வழிபாட்டின் மீதும் அதிக நம்பிக்கை உள்ளது. கடந்தாண்டு திருப்பூர் வந்த போது, சிவன்மலை சென்று முருகரை வழிபட்டோம்; ஒரு வேண்டுதல் வைத்திருந்தோம். அது, சில வாரங்களில் நிறைவேறியது. கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது. இம்முறை வந்த போது, அவிநாசியில் தேர்த்திருவிழா நடப்பதை அறிந்து, மிகவும் சக்திவாய்ந்த அவிநாசிலிங்கேஸ்வரர் மற்றும் கருணாம்பிகை அம்மனையும் வழிபட்டோம்,’ என்றனர்.