மானாமதுரை மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக முளைப்பாரி விழா
மானாமதுரை: மானாமதுரை மாரியம்மன் கோயில் தெரு மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழா மற்றும் முளைப்பாரி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த மார்ச். 25ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. நேற்று மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயில் முன்பாக 108 சங்காபிஷேகம் மற்றும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு மண்டலாபிஷேகம் நடைபெற்றது. அன்னதானமும் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு கோயிலில் 108 முளைப்பாரிகள் வளர்க்கப்பட்ட நிலையில் பெண்கள் கோயில் முன்பாக கும்மி பாட்டு பாடி அம்மனை வழிபட்டனர். நேற்று மாலை முளைப்பாரி ஓடுகளை தலையில் தூக்கிக்கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து மாரியம்மனை வேண்டினர். விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி விஜி போஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.