திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர் தரிசனம்
பாபநாசம்: புரசகுடி சிவன்கோவிலில் பிரம்மா, சரஸ்வதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே புரசகுடி கிராமத்தில் முதல் முறையாக பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் திருக்கல்யாண வைபவம், மக்கள் நலன் கருதியும், கல்வி நலனுக்காகவும், லோபா முத்திரை அகத்தியர் வழிபாட்டு அடியார்களும், கிராம மக்களும் இணைந்து நடத்தினர். இக்கிரமாத்தில் கருங்கல்லால் கட்டப்பட்ட பெரிய சிவன் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகள் தாங்கி நிற்கும் இக்கோவில், தற்போது சிதலமடைந்து, திருப்பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உலக நலன், விவசாய நலன் வேண்டியும், கோவிலுக்கு விரைவில் திருப்பணி நடக்கவும், கோவிலின் வடமேற்கு மூலையில், மகாலட்சுமி, சரஸ்வதிக்கு புதிதாக சன்னதி கட்டி, கருங்கல் மூலவரையும் வைத்து, அண்மையில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலில் முதன்முறையாக பிரம்மா சரஸ்வதி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. ஊர்மக்களும், பெண்களும், நூற்றுக்கு மேற்பட்ட தட்டுகளில் பழம், பலகாரம், பட்டாடை, வெற்றிலை பாக்கு உள்ளிட்ட சீர்வரிசை வந்து, 7 வாழை மரங்கள் நட்டு, அதில் சப்த மாதாக்களை வரவழைத்து திருமணம் நடந்தது. இதனால் கன்னிப்பெண்களின் திருமண தடைநீங்கும் என நம்பப்படுகிறது. விழா முடிந்ததும் அனைவருக்கும் திருமண விருந்து நடந்தது. இந்நிகழ்ச்சியில் அனைத்து பகுதிகளிலிருந்தும், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.