மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு டிக்கெட் பெற இரண்டு மணி நேரம் காத்திருக்கும் அவலம்
திருவாலங்காடு: மாந்தீஸ்வரர் பூஜைக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவாலங்காடில், திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், தினமும் 1,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில், 2010ம் ஆண்டு முதல் சனிக்கிழமை தோறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில், காலை 6-:00 – மதியம்- 12:00 மணி வரை, மூன்று குழுக்களாக 160 –- 200 பக்தர்கள் வரை பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை காலை கோவில் அலுவலகத்தில் டிக்கெட் வினியோகிக்கப்படுகிறது. இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில், இரண்டு மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், அலைச்சல் ஏற்படுவதாக பக்தர்கள் குமுறுகின்றனர். எனவே, மாந்தீஸ்வரர் பூஜைக்கான டிக்கெட்டை, மீண்டும் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை கோவில் நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.