பஞ்ச கேதார் புனித யாத்திரை. ருத்ரநாத் கோவில் திறப்பு.. பக்தர்கள் பரவசம்
சாமோலி: பஞ்ச கேதார் புனித யாத்திரையின் ஒரு பகுதியாகத் திகழும் ஸ்ரீ ருத்ரநாத் கோவில் திருவாயில்கள், கோடைக்கால யாத்திரையை முன்னிட்டு திறக்கப்பட்டது.
பாரம்பரிய ஆகம விதிமுறைகளைப் பின்பற்றி, இறைவனின் உற்சவத் திருவீதி உலா ஞாயிறன்று கோபிநாத் கோவிலில் இருந்து புறப்பட்டது. இறைவனின் திருக்காட்சியைப் பெறநூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர். சாமோலி மாவட்டப் பொறுப்பு அமைச்சரான உத்தரகாண்ட் அமைச்சர் பாரத் சிங் சௌத்ரி, பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்தத் திருவீதி உலா நேற்று திங்களன்று ருத்ரநாத் ஆலயத்தைச் சென்றடைந்தது.
ருத்ரநாத் ஆலயம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது கோபேஷ்வரில் உள்ள கோபிநாத் ஆலயத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இத்திருத்தலத்தை அடைய, பக்தர்கள் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைந்திருக்கும் செங்குத்தான மற்றும் சவாலான மலைப்பாதை நடைபயணத்தை மேற்கொள்ள வேண்டும். கோவில் திறப்பு விழா ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஞாயிறு காலையில் கோபிநாத் ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. வேத மந்திரங்கள் முழங்கவும், மலர் மாரி பொழியவும், கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவின் இசைக்குழுவினர் இசைக்கருவிகளை இசைக்கவும், இறைவனின் பல்லக்கு அங்கிருந்து புறப்பட்டது. வேத ஆகம விதிமுறைகளின்படி, திங்களன்று நண்பகல் வேளையில் கோவிலின் திருவாயில்கள் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சாமந்தி மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பக்தர்கள் ருத்ரநாத்தின் ஏகானன எனப்படும் ஒற்றை முகம் கொண்ட வடிவத்தைத் தரிசிக்கலாம் என கோவில் அர்ச்சகர் ஹரிஷ் பட் தெரிவித்துள்ளார்.