உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமூர்த்திமலையில் திடீர் கன மழை பக்தர்கள் உடனடியாக வெளியேற்றம்

திருமூர்த்திமலையில் திடீர் கன மழை பக்தர்கள் உடனடியாக வெளியேற்றம்

உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் கன மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பஞ்சலிங்க அருவி மற்றும் கோவில் வளாகத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நேற்று காலை நீர் வரத்து சீராக இருந்ததால், சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டு, உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில், நேற்று மதியத்திற்கு மேல், மலைப்பகுதிகளில் கன மழை பெய்ததால், 3:30 மணிக்கு, அருவியில் குளித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அவசரம், அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சுற்றுலா பயணியர் வெளியேற்றப்பட்ட, ஒரு மணி நேரத்தில், பஞ்சலிங்கஅருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல அடி உயரத்திற்கு நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதே போல், மலையடிவாரத்தில், தோணியாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கோவில் வளாகத்தை வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டதால், அமணலிங்கேஸ்வரர் கோவில் நடை சாத்தப்பட்டு, கோவில் வளாகத்திலிருந்த பக்தர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். கோவில் வளாகம், அருவிக்கு செல்லும் வழியில் கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணியர் மற்றும் கோவில் வளாகத்திலிருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டதால், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !