ஏர்வாடி தர்காவில் கொடியிறக்கம் பனை ஓலை பெட்டியில் நெய் சோறு
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் கொடியிறக்கம் நடந்த நிலையில் 18 ஆயிரம் கிலோ அரிசியில் பனை ஓலை பட்டையில் நெய் சோறு வழங்கப்பட்டது.
ஏர்வாடியில் அல்குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்காவில் 852ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா மே 10ல் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் ஏர்வாடி தர்காவிற்கு வந்தனர். மே 10 மாலை முதல் சந்தனக்கூடு திருவிழா துவங்கி மறுநாள் அதிகாலை புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. ஒரு மாதம் விமரிசையாக நடந்த இவ்விழாவில் நேற்று மாலை 5:45 மணிக்கு 70 அடி உயர கம்பத்தில் இருந்து கொடி இறக்கம் செய்யப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபையினர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். தப்ரூக் எனும் நெய்ச்சோறு பிரசாதமாக வழங்கப்பட்டது. நெய் சோற்றின் சிறப்பம்சம் இந்நிலையில் ‘தப்ரூக்’ எனப்படும் நெய்சோறு 18 ஆயிரம் கிலோ அரிசியில் பனை ஓலை பெட்டியில் பொதுமக்கள், யாத்ரீகர்களுக்கு வழங்கப்பட்டது. ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் கூறுகையில், கி.பி., 1744ம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் முத்துக்குமார விஜயரகுநாத சேதுபதி மூலமாக கொடி இறக்கம் அன்று அன்னதானம் வழங்குவது துவக்கி வைக்கப்பட்டது. அது முதற்கொண்டு நெய்ச்சோறு வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து சமுதாய மக்களுக்கும் 17,000 பனை ஓலை பெட்டியில் நெய் சோறு பார்சலாக வழங்கப்பட்டது. ஏர்வாடி தர்காவில் பிரசாதமாக விநியோகிக்கப்படும் தப்ரூக் எனும் நெய்ச்சோற்றை பெற்று அவற்றை யாத்ரீகர்கள் சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் விமானங்கள் மூலமாக அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.