இலந்தக்கரையில் 2300 ஆண்டு பழமையான செப்பு நாணயம் கண்டறிந்த வரலாற்று ஆர்வலர்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இலந்தக்கரையில் 2300 ஆண்டு பழமையான செப்பு நாணயம் கண்டறியப்பட்டுள்ளது.
காளையார்கோவில் அருகே இலந்தக்கரை கிராம பகுதி காடுகளில் முதுமக்கள் தாழி, வெள்ளி, தங்கம், செப்பு நாணயங்களை வரலாற்று ஆர்வலர்கள் கண்டறிந்து வருகின்றனர். இலந்தக்கரையில் தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொண்டால், கீழடிக்கு இணையான வரலாற்று நகரம் கிடைக்கும் என வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆட்சியில் தொல்லியல் துறை செயலரிடம் வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் காளையார்கோவில் அருகே இலந்தக்கரையை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் ரமேஷ் பழங்கால பொருட்களை சேகரித்து வருகிறார். இக்கிராமத்தில் சிரியா நாட்டில் 7 ம் நுாற்றாண்டில் அச்சிடப்பட்ட தங்க நாணயம், ரோமானிய நாட்டு முதலாம் நுாற்றாண்டு செம்பு நாணயம், 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மவுரிய காலத்து வெள்ளி நாணயம், 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ராஜராஜசோழனின் செம்பு நாணயம் உள்ளிட்டவற்றை கண்டறிந்து எடுத்துள்ளார். 2300 ஆண்டு பழமையான செப்பு நாணயம்: ரமேஷ் கூறியதாவது, இலந்தக்கரை வேளார் திடலில் எடுக்கப்பட்ட அனைத்து வரலாற்று நாணயங்களையும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கு ஆராய்ச்சிக்காக வழங்கிவிட்டேன். தற்போது 2300 ஆண்டு பழமையான மவுரிய அரசின் செம்பு நாணயம் கிடைத்துள்ளது. இது முத்திரை நாணயம் வகையை சேர்ந்தது. உருக்கப்பட்ட உலோகத்தின் மீது வெவ்வேறு உருவங்கள் கொண்ட அச்சுகளை கொண்டு தனித்தனியாக முத்திரையிட்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன. சதுர வடிவில் அமைந்துள்ள இந்த செப்பு நாணயத்தின் மீது சூரியன், ஆறு, கைகள் கொண்ட சக்கரம் மற்றும் யானை, காளை போன்ற விலங்கு உருவம் முத்திரையிடப்பட்டுள்ளன. இது மவுரிய அரசின் அதிகாரபூர்வ நாணய வெளியீட்டு முறை என்றார்.